ஓட்டு எண்ணிக்கை மையம் அனைத்து பணிகள் தீவிரம்
திருப்பூர்:திருப்பூர் மாட்டத்தில் உள்ள, எட்டு சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை மையம், எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ளது.
நாளை ஓட்டுப்பதிவு நடக்கும். ஓட்டுப்பதிவு முடிந்து, கட்சி முகவர்கள் முன்னிலையில் 'சீல்'வைத்து, ஓட்டுப்பெட்டிகள் மற்றும் தளவாட பொருட்கள், எண்ணிக்கை மையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். மண்டல தேர்தல் அலுவலர்கள், அவற்றை பெற்று ஒப்படைக்க, ஒவ்வொரு தொகுதிக்கும், வரவேற்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் பதிவான ஓட்டு விவரங்கள் அடங்கிய படிவங்கள், 'ஸ்ட்ராங்ரூம்'மில் வைக்கப்படும். வரும், மே 4 ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. அதுவரை, மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பில் ஓட்டு எண்ணிக்கை மையம் இருக்கும்.
வளாகம் முழுவதும், ஏராளமான 'சிசிடிவி' கேமரா பொருத்தி, கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. நுழைவாயிலில் சென்றதும், அந்தந்த தொகுதிகளின் ஓட்டு எண்ணிக்கை மையம் செல்ல வசதியாக, தனித்தனி பாதை வசதி அமைக்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறை அலுவலர்கள், மூன்று 'ஷிப்ட' முறையில், ஓட்டு எண்ணிக்கை மையத்தை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேட்பாளர் பிரதிநிதிகளும், அதேபோல், வளாகத்தில் இருந்து, 'சிசிடிவி' காட்சிகளை பார்த்து, கண்காணிக்கலாம். அதற்காக, தேவையான கேமராக்கள், கூடுதல் மின்விளக்குகள், முடிவுகளை அறிவிக்கும் 'மைக்' போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக, தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.