தமிழகத்தில் இணக்கமான அரசு அமைய  தாமரைக்கு ஓட்டு போடுங்கள்: வானதி

கோவை: ''மத்தியில் பா.ஜ., வும் மாநிலத்தில் அ.தி.மு.க., அரசும் அமைந்த போது ஏராளமான திட்டங்கள் நிறைவேறின. அதே சூழல் ஏற்பட தாமரைக்கு வாக்களியுங்கள்,'' என, வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

தடாகம் ரோடு வெங்கிட்டாபுரத்திலிருந்து புறப்பட்ட வடக்கு தொகுதி பா.ஜ.,வேட்பாளர் வானதி தலைமையிலான வாகன பேரணி, பி.என்.புதுார்., வீரகேரளம், அஜ்ஜனுார், ஓணாப்பாளையம், பொம்மண்ணம்பாளையம், கல்வீரம்பாளையம் வழியாக வடவள்ளியில் நிறைவடைந்தது.

வானதிசீனிவாசன் பேசியதாவது:

தி.மு.க., வின் பிடியிலிருந்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், தே.ஜ.,கூட்டணி உருவானது. 2016-2021 ஆட்சி காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த வேலுமணிக்கு சிறந்த உள்ளாட்சித்துறை அமைச்சர் விருதை மத்திய அரசு வழங்கியது.

மாதத்தில் மூன்று நாட்கள் டில்லிக்கு செல்வார். கோவைக்கு மத்திய அரசு திட்டங்களையும் அதற்கான நிதியையும் பெற்றுக் கொடுத்தார். புதிய குடிநீர் திட்டங்கள், மேம்பாலங்கள், சாலைகள், தொழிற்சாலைகள் என, ஏராளமான திட்டங்களை கேட்டு பெற்றார்.

அப்போது கோவை மாநகருக்கு மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை ரூ.1,500 கோடியில் நிறைவேற்றியது. அந்த மகத்தான திட்டத்தின் விளைவாக கோவையிலுள்ள பூங்காக்கள், குளங்கள் பொலிவு பெற்றன.

கோவை மக்கள் பயனடைந்தனர். அதுமட்டுமின்றி, 11 புதிய பாலங்கள், ஏழை மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள், 24 மணி நேர குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இவையனைத்தும் அ.தி.மு.க.,ஆட்சிக்காலத்தில் மத்திய அரசின் ஒத்துழைப்போடு நடந்தன.

மத்தியிலும், மாநிலத்திலும் இணக்கமான அரசு அமைந்திருந்ததால் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டன. அது போன்ற சூழல் தற்போதும் ஏற்பட தாமரைக்கு வாக்களியுங்கள். தி.மு.க., எந்த புதிய திட்டங்களையும் தீட்டவில்லை.

அ.தி.மு.க.,ஆட்சிகாலத்தில் நிறைவேற்றிய திட்டங்களுக்கு பெயர்களை மாற்றி ஸ்டிக்கர் ஒட்டி தங்களது ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றியதாக சொல்லிக்கொண்டது.

போதை, மது கலாசாரத்திலிருந்து விடுபட தே.ஜ.,கூட்டணியின் பா.ஜ.,வேட்பாளரான எனக்கு, தாமரை சின்னத்தில் ஓட்டு போட கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement