'மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் உதவி தொகை' ;தெற்கு தொகுதிக்கு செந்தில்பாலாஜி வாக்குறுதி
கோவை: கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் செந்தில்பாலாஜி, சிவானந்தா காலனியில் பிரசாரத்தை நிறைவு செய்தார்.
அப்போது, அவர் பேசியதாவது:
கோவை மாவட்டத்தில் 5 ஆண்டுகளில் 21,000 கோடிக்கு வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டன. தெற்கு தொகுதியின் அடையாளமாக செம்மொழி பூங்கா இருக்கிறது. ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு வளர்ச்சி திட்டங்கள் அறிவித்துள்ளோம். தமிழக எம்.பி.க்கள் மூலமாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுப்போம்.
கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில், தெற்கை வளர்ச்சி பெற்ற தொகுதியாக மாற்றுவோம். குட்டி ஜப்பான் போல் தரம் உயர்த்துவதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுப்பேன். தெற்கு தொகுதியில் வசிப்போரில் வீடு இல்லாதவர்களுக்கு புதிதாக வீடு கட்டித்தரப்படும்.
பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்கப்படும். சாக்கடை கால்வாய், சமுதாய கூடம், பூங்கா கட்டித் தர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். வார்டு வாரியாக ஒன்றிணைத்துள்ளோம். ஆட்சிக்கு வந்ததும் ஓராண்டுக்குள் நிறைவேற்றுவோம்.
கோவை தெற்கு என்றால், தி.மு.க. கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும். தெற்கு தொகுதியில் இருந்து உயர்கல்விக்கு செல்லும் மாணவ, மாணவியருக்கு ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கல்வி உதவி தொகை வழங்கப்படும்.
1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். மகளிருக்கு தையல் பயிற்சி அளிக்கப்படும்; பயிற்சி முடித்ததும் இலவசமாக தையல் மிஷின் வழங்கப்படும்.
போட்டித் தேர்வுக்கு தயாராவோருக்கு எவ்வித கட்டணமின்றி கற்பிக்க மையம் துவக்க இருக்கிறோம். தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகம் திறக்கப்படும். அங்கு மக்களின் கோரிக்கை கேட்கப்படும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
@block_B@
செந்தில்பாலாஜி மேலும் பேசுகையில், ''உங்கள் குடும்பத்தில் ஒருவராக இருப்பேன். தெற்கில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் வர வேண்டும்; உங்களை சந்தித்து பேச வேண்டும் என்பது என் ஆசை. வாக்காளர்கள் ஒவ்வொருவரிடமும் எனது மொபைல் போன் எண் இருக்க வேண்டும். உங்களது எண் என்னிடம் இருக்க வேண்டும். உங்களுக்கு ஏதேனும் தேவை என்றால் நீங்கள் அழைக்கக் கூடியது என்னுடைய மொபைல் போன் எண்ணாக இருக்க வேண்டும்,'' என்றார்.block_B