ஈரான் கப்பலில் சீன ரசாயனம் அமெரிக்க முன்னாள் எம்.பி., புகார்

நியூயார்க்: அமெரிக்கா கைப்பற்றிய ஈரான் கப்பல் ஒன்று சீனாவில் இருந்து ஏவுகணை ரசாயனப் பொருட்களை ஏற்றிச் சென்றதாக குடியரசு கட்சி முன்னாள் எம்.பி.,யும், முன்னாள் ஐ.நா., துாதருமான நிக்கி ஹேலி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா விதித்த தடையை மீறி சென்ற ஈரான் கப்பல் ஒன்று சமீபத்தில் இடைமறிக்கப்பட்டது.

அந்த கப்பலை சோதனையிட்டபோது, ஏவுகணையை உருவாக்குவதற்கான ரசாயனங்களை சீனாவிலிருந்து ஏற்றிச் சென்றது தெரியவந்தது. இது ஈரானுக்கு, சீனா மறைமுகமாக ராணுவ ஆதரவை வழங்குவதை காட்டுகிறது.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறுகையில், ''எனக்குத் தெரிந்தவரை, இது ஒரு வெளிநாட்டு கொடியுடன் சென்ற கப்பல்.

''தீய நோக்கத்துடன் தொடர்புபடுத்துவதையும், மிகைப்படுத்துவதையும் ஒருபோதும் ஏற்க மாட்டோம். இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமெரிக்கா வரி உயர்வு நடவடிக்கை மேற்கொண்டால், சீனா பதிலடி கொடுக்கும்,'' என்றார்.

Advertisement