பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு ரூ.25 லட்சம் இன்சூரன்ஸ்: ஐகோர்ட்

மதுரை: 'பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு, 25 லட்சம் முதல், 30 லட்சம் ரூபாய் வரை, இன்சூரன்ஸ் திட்டத்தை கட்டாயமாக்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.

நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் அமர்வு முன், நேற்று முன்தினம் வழக்கறிஞர் கருணாநிதி ஆஜராகி முறையிட்டதாவது:

விருதுநகர் மாவட்டம், கட்டனார்பட்டி பட்டாசு ஆலை விபத்தில், 25 பேர் பலியாகினர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

இது தொடர்பாக, தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து, நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் முறையிட்டார்.

நீதிபதிகள், 'பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து, அரசிடம் விபரம் பெற்று, தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல்கான் தெரிவிக்க வேண்டும்' என்றனர்.

நேற்று, அதே நீதிபதிகள் அமர்வு முன் ஆஜரான அஜ்மல்கான், ''இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா, 8 லட்சம் ரூபாய் இழப்பீடு, இறுதிச்சடங்கு மேற்கொள்ள தலா, 50,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.

நீதிபதிகள், 'ஒவ்வொரு மாதமும் இதுபோல் விபத்துகள் நடப்பது துரதிர்ஷ்டவசமானது. பலர் பலியாகின்றனர். இது தீவிரமான பிரச்னை; தீர்வு காண வேண்டும்.

'பட்டாசு ஆலைகளில் ஒவ்வொரு தொழிலாளிக்கும், 25 முதல், 30 லட்சம் ரூபாய் வரை இன்சூரன்ஸ் திட்டத்தை கட்டாயம் நடைமுறைப்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.

'இன்சூரன்ஸ் செய்த பின்னரே பணியில் ஈடுபடுத்துவதை உறுதி செய்ய வேண்டும்' என்றனர். அஜ்மல்கான், ''நீதிமன்றத்தின் கருத்து, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்,'' என தெரிவித்தார்.

Advertisement