சென்னை, துாத்துக்குடியில் குறைந்த மின்னழுத்த பிரச்னை சரிசெய்ய மத்திய அரசு உத்தரவு
சென்னை: சென்னை, துாத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில், 'லோ வோல்டேஜ்' எனப்படும் குறைந்த மின்னழுத்த பிரச்னை ஏற்படுவதாகவும், அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும், தமிழக மின் வாரியத்திற்கு, மத்திய மின் துறை உத்தரவிட்டுள்ளது.
அனல், நீர் உள்ளிட்ட பல வகை மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை மின் வாரியம், பல்வேறு திறன்களில் உள்ள துணை மின் நிலையங்களுக்கு எடுத்து வந்து, உயரழுத்தத்தை குறைக்கிறது.
பின், அந்த மின்சாரம், டிரான்ஸ்பார்மர் உள்ளிட்ட சாதனங்கள் உதவியுடன் வினியோகம் செய்யப்படுகிறது. ஒரு டிரான்ஸ்பார்மரில் இருந்து அதன் திறனுக்கு ஏற்ப, எத்தனை மின் இணைப்புகளுக்கு மின் வினியோகம் செய்ய வேண்டுமோ, அந்தளவுக்கு மட்டுமே செய்ய வேண்டும். அதை விட, கூடுதல் இணைப்புகளுக்கு மின் வினியோகிக்கும்போது, குறைந்த மின்னழுத்த பிரச்னை ஏற்படுகிறது.
இந்த பிரச்னை, காற்றாலை, சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள் அதிகம் உள்ள இடங்களிலும் ஏற்படுகிறது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
துாத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில், காற்றாலை, சூரியசக்தியை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்கள் அதிகம் உள்ளன.
அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரம், துாத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, திருநெல்வேலி மாவட்டம் கானார்பட்டியில் உள்ள, 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் வாயிலாக, சென்னை வரை எடுத்து வரப்பட்டு, பல பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
சென்னை மற்றும் புறநகரில் வீடுகள், தொழிற் சாலைகள் அதிகம் இருப்பதால், மின் தேவை அதிகம் உள்ளது.
எனவே, தொழில் துறை மின் தேவை அதிகரிப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க மின் நிலையங்களால் சென்னை, கயத்தாறு, கானார்பட்டி, திருச்சி ஆகிய இடங்களில் குறைந்த மின்னழுத்த பிரச்னை இருப்பதாக, மத்திய மின் துறை தெரிவித்துள்ளது.
அதை சரிசெய்ய துணை மின் நிலையங்களில், சீராக மின்சாரத்தை அனுப்பும் கருவிகளை பொருத்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.