பாறை இடுக்கில் சிக்கி தவித்த குட்டி யானை மீட்பு

பாலக்காடு: அட்டப்பாடி வனப்பகுதியில் தாயை பிரிந்து தவித்த, ஐந்து நாட்களேஆன குட்டி யானை மீட்கப்பட்டு, தற்போது பாலக்காடு தோணி பராமரிப்பு மையத்தில் பராமரிக்கப்படுகிறது.

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி மேல அப்பன்னுார் வனப்பகுதியில், கடந்த, 14ம் தேதி ஓடையில் பாறை இடுக்குகளில் ஒரு நாள் மட்டுமே ஆன ஆண் குட்டி யானை சிக்கியிருந்தது. இதனைக்கண்ட வனத்துறையினர், குட்டி யானையை மீட்டனர்.

தாய் யானை மீண்டும் வந்து குட்டியை அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கையில், பல மணி நேரம் ஊழியர்களின் கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஆனால், தாய் யானை வராததால், குட்டி யானையின் பாதுகாப்பு கருதி, கடந்த சனிக்கிழமை மாலை தோணி யானைகள் பராமரிப்பு முகாமிற்கு கொண்டு வரப்பட்டது.

தற்போது, குட்டி யானைக்குத் தேவையான இளநீர் போன்ற சத்தான நீர் ஆகாரங்கள் உணவாக வழங்கப்பட்டு வருகின்றன.

குட்டி யானையின் ஆரோக்கியத்தை வனத்துறை கால்நடை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். யானைக்கு வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏதுமில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வனத்துறையினர் கூறுகையில், 'பிரசவித்த குட்டியை ஒரு நாளில் தாய் யானை பிரிந்து செல்லாது. அதனால், தாய் யானைக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என, அப்பகுதியில் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்,' என்றனர்.

Advertisement