வெளியூர் நபர்கள் வௌியேற உத்தரவு: கலெக்டர்


நாமக்கல், கலெக்டர் துர்கா மூர்த்தி வெளியிட்ட அறிக்கை:

சட்டசபை தேர்தல் பிரசாரம், நேற்று மாலை, 6:00 மணியுடன் நிறைவு பெற்றது. நாளை காலை, 7:00 முதல், மாலை, 6:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி, இனி தேர்தல் தொடர்பாக கூட்டமோ, ஊர்வலமோ நடத்தக்கூடாது. சினிமா, 'டிவி' போன்ற சாதனங்களில் பிரசாரம் செய்யக்கூடாது. இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள் மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிகள் மூலம் பிரசாரம் செய்யக்கூடாது. மீறினால், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

தொகுதிக்கு வெளியே இருந்து அழைத்து வரப்பெற்ற, அந்த தொகுதியின் வாக்காளராக அல்லாத அரசியல் கட்சி நிர்வாகிகள், ஊர்வலப்பணியாளர்கள் உள்ளிட்டோர், உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். மண்டபங்கள், ஓட்டல்களில் வெளியூர் நபர்கள் யாரும் தங்கி இருக்கக் கூடாது. தொகுதி எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட வாகன அனுமதி பாஸ்கள், நேற்று மாலை, 6:00 மணியுடன் செல்லாததாகிவிட்டது.
ஒவ்வொரு வேட்பாளரும், சொந்த பயன்பாட்டிற்காக ஒரு வாகனம், முகவர்கள் பயன்பாட்டிற்கு ஒரு வாகனம், தேர்தல் முகவர் அல்லது பணியாளர் பயன்பாட்டிற்கு, ஒரு வாகனம் என மொத்தம், மூன்று வாகனம் மட்டுமே அனுமதிக்கப்படும்.
வாக்காளர்களை அழைத்து செல்ல வாகனங்களை பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். ஓட்டுச்சாவடியிலிருந்து, 100 மீ., தொலைவிற்கு வெளியே மட்டுமே அரசியல் கட்சியின் தொடர்பு மையங்கள் அமைக்க வேண்டும். ஓட்டுச்சாவடி மற்றும் அதன், 100 மீ., சுற்றளவிற்குள் ஆயுதங்கள் ஏந்தி செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement