புதிய பஸ் நிலையத்தால் மக்கள் பாதிப்பு அ.தி.மு.க., ஆட்சியில் தீர்வு காணப்படும் வேட்பாளர் ராஜிவ்காந்தி உறுதி

கள்ளக்குறிச்சி: தி.மு.க.,வினரின் சுயலாபத்திற்காக கொண்டு வரப்பட்ட கள்ளக்குறிச்சி புதிய பஸ் நிலையத்தால் பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும் அதற்கு உரிய தீர்வு காணப்படும் என கள்ளக்குறிச்சி அ.தி.மு.க., வேட்பாளர் ராஜிவ்காந்தி கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது; அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை கொண்டு வரப்பட்டது. தி.மு.க., கடந்த தேர்தலின் போது நீட் ரத்து போன்ற பல பொய் வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது. கொலை, கொள்ளை, வழிபறி, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத, மக்கள் விரோத ஆட்சியாக மட்டுமே தி.மு.க., இருந்துள்ளது.

புதிய கலெக்டர் அலுவலக கட்டடம் நாங்கள் தான் கொண்டு வந்தோம் என்று தி.மு.க.,வினர் பொய்யான பிரசாரம் செய்கின்றனர். கலெக்டர் அலுவலக கட்டுமான பணிக்கு அ.தி.மு.க., ஆட்சியிலேயே அடிக்கல் நாட்டி துவங்கிய நிலையில், நீதிமன்ற வழக்கால் பணிகள் தாமதம் ஏற்பட்டது. அதன்பின் வழக்கு முடிந்து கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பொய் வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றிய தி.மு.க., வுக்கு தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்.

கடந்த 5 ஆண்டு கால தி.மு.க., ஆட்சியில் மாவட்டத்தில் எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை. தி.மு.க.,வினர் தங்களது சுயலாபத்திற்காக புதிய பஸ் நிலையத்தை கொண்டு வந்து பல கோடி ரூபாய் மதிப்பில் கொள்ளை அடித்துள்ளனர். தற்போது புதிய பஸ் நிலையத்தால் கள்ளக்குறிச்சி நகர மக்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும் பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்காத வண்ணம் புதிய பஸ் நிலைய பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என கூறினார்.

Advertisement