கல்பாக்கம் மீனவர்கள் ஓட்டளிக்க ஜாமின் நிபந்தனை தளர்வு

புதுப்பட்டினம்: கல்பாக்கம் பகுதியில் மோதல் வழக்கில், நிபந்தனை ஜாமின் பெற்று, வெளியிடங்களில் தங்கியிருந்த மீனவர்கள், தேர்தலில் ஓட்டளிக்க, ஜாமின் நிபந்தனை தளர்த்தப்பட்டு, அவரவர் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். கல்பாக்கம் அருகில், அடுத்தடுத்த பகுதிகளான, புதுப்பட்டினம் குப்பம், வாயலுார் உய்யாலிகுப்பம் ஆகிய மீனவர் பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் 2024 முதல் எல்லை பிரச்னை நீடித்து வருகிறது.

இதனால், சர்ச்சை பகுதி தொடர்பாக நிரந்தர தீர்வு காண, உய்யாலிகுப்பம் மீனவர்கள், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இதனிடையே, கடந்த பிப்.,யில், சுவாமி உத்சவ பால்குட ஊர்வலம், சர்ச்சை பகுதி வழியாக செல்ல, இருதரப்பினரும் பேசி முடிவெடுத்தனர்.

ஆனால் உத்சவத்தின் போது, இருதரப்பினரும் மோதிக்கொண்டதால், அப்பகுதியே கலவரமாக மாறியது. கல்பாக்கம் போலீசார், இருதரப்பிலும், தலா 12 பேரை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், அவர்கள் நிபந்தனை ஜாமின் பெற்றனர்.

மேலும், தலைமறைவாக இருந்தவர்களை, போலீசார் தேடி வந்த நிலையில், அவர்களும் இம்மாதம் நிபந்தனை ஜாமின் பெற்று, கடலுார், சென்னை ஆகிய பகுதிகளில் தங்கி, அப்பகுதி போலீஸ் நிலையத்தில், தினமும் கையெழுத்திட்டு வந்தனர்.

இந்நிலையில், அவரவர் தொகுதிகளில், சட்டசபை தேர்தலில் ஓட்டளிக்க இயலாதது குறித்து, நம் நாளிதழில் சமீபத்தில் செய்தி, வெளியானது. அதன் எதிரொலியாக, அவர்களுக்கு ஜாமின் தளர்த்தப்பட்டது.

இதுகுறித்து உய்யாலிகுப்பம் மீனவர்கள் கூறியதாவது:

நாங்கள் 30 பேர், நிபந்தனை ஜாமினில், கடலுார் நியூ டவுனில் தங்கியிருந்தோம். தினமலரில் வெளியான செய்திக்கு பிறகு, ஜாமின் நிபந்தனையை தளர்த்த கோரி, நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தோம். இதை விசாரித்த நீதிமன்றம், எங்களது நிபந்தனையை தளர்த்தி, திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில், ஒரு வாரத்திற்கு கையொப்பமிட உத்தரவிட்டது. தற்போது எங்கள் ஊருக்கு ஓட்டளிக்க வந்துள்ளோம். அதேபோல் புதுப்பட்டினம் மீனவர்களுக்கும், சில நாட்களுக்கு முன், நிபந்தனை தளர்த்தப்பட்டுள்ளது.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement