பழமையான பாலத்துக்கு மாற்றாக புதிய பாலம்: மண் ஆய்வு பணிகள் துவக்கம்

கூடலுார்: கூடலுார் ஓவேலி பகுதியில், நுாற்றாண்டு பழமையான பாலத்துக்கு மாற்றாக புதிய பாலம் கட்டுவதற்கான மண் ஆய்வு செய்யும் பணி நடந்தது.

நீலகிரி மாவட்டத்தில், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் சாலைகள் மற்றும் ஆறுகள் குறுக்கே பாலங்கள் அமைத்து போக்குவரத்தை நடந்தது. இவர்கள் அமைத்த பல பாலங்கள் இன்றும் பயன்பாட்டில் உள்ளது. அதில் கூடலுார் ஓவேலி ஆரூட்டுப்பாறை சாலைகளில் மரப்பாலம் அருகே, சுண்ணாம்பு ஆற்றை கடந்து செல்ல, 1899ல் இரும்பை பயன்படுத்தி பாலம் அமைத்தனர்.

127 ஆண்டுகள் பழமையான இந்த பாலம் இன்றும் வாகன போக்குவரத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர். இப்பகுதி மக்களால் 'சுண்ணாம்பு பாலம்' என அழைக்கப்படும் இந்த பாலம் ஓவேலி பகுதியின் முக்கிய அடையாளமாகவும் உள்ளது.

இப்பாலம், கடந்த பல்லாண்டுகளாக சேதமடைந்து வருவதால் வாகனங்கள் இயக்கவும் மக்கள் நடந்து செல்லவும் சிரமப்பட்டு வருகின்றனர். பாலத்தை சீரமைக்க மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் புதிய பாலம் அமைப்பதற்காக நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு பணியை துவங்கியுள்ளனர்.

அதிகாரிகள் கூறுகையில், 'நுாற்றாண்டுகளை கடந்த பழமையான இப்பாலத்துக்கு மாற்றாக அப்பகுதியில் புதிய பாலம் கட்டுவதற்கான, மண் பரிசோதனை பணிகள் துவங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பால்ம் கட்டுவதற்கான திட்ட மதிப்பீடு செய்து அரசுக்கு அனுப்பப்படும்,' என்றனர்.

Advertisement