வீடுகள் கட்டித்தரக்கோரி பளியன்குடியில் ஓட்டு போட மறுத்த பழங்குடியின மக்கள் - பேச்சுவார்த்தைக்குப் பின் ஓட்டளித்தனர்

கூடலுார்:கூடலுார் லோயர்கேம்ப் அருகே பளியன்குடியில் பல ஆண்டுகளாக சேதமடைந்த வீடுகளுக்கு பதில் புதிதாக வீடுகள் கட்டித்தராததற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியின மக்கள் ஓட்டு போட வரவில்லை. வனத்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் 2:30 மணி நேரம் கழித்து ஓட்டு போட்டனர்.

கூடலுார் லோயர்கேம்ப் அருகே வனப்பகுதியில் அமைந்துள்ள பளியன்குடியில் 47 குடும்பங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். அரசு கட்டிக் கொடுத்த வீடுகள் அனைத்தும் சேதமடைந்தது. பல வீடுகள் இடியும் தருவாயில் உள்ளது.

மழைக்காலங்களில் வசிக்க முடியாத நிலையில் உள்ளதால் புது வீடுகள் கட்டிக் கொடுக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் ஒவ்வொரு முறையும் தேர்தல் நேரத்தில் ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர்கள் உடனடியாக கட்டித் தருவதாக வாக்குறுதி அளித்து செல்வதோடு சரி, தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்கவில்லை.

ஆண்டிபட்டி தொகுதி பளியன்குடியில் ஓட்டுச் சாவடி எண் 332ல் நேற்று காலை ஓட்டுப் பதிவு 7 மணிக்கு துவங்கிய போதிலும், அதிருப்தியில் இருந்த 108 பழங்குடியின மக்கள் ஓட்டு போட வரவில்லை. வீடு கட்டித் தராமல் ஓட்டு போட மாட்டோம் என பேச்சுவார்த்தைக்கு வந்த போலீசாரிடம் தெரிவித்தனர்.

இந்நிலையில் ரேஞ்சர் பிச்சைமணி உள்ளிட்ட வனத்துறையினர் நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடத்தினர். தேர்தல் முடிந்ததும் முதற்கட்டமாக 27 வீடுகளும், அதனை தொடர்ந்து மீதமுள்ள வீடுகளும் கட்டாயம் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்ததால் 2.30 மணி தாமதமாக காலை 9.30 மணிக்கு ஓட்டு போட்டனர்.

Advertisement