கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

கம்பம்:கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து தினமும் பல்வேறு மண்டகப்படிகளில் அம்மன் எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளார்.

பிரசித்தி பெற்ற கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் (ஏப். 22 ல்) நடந்தது. முன்னதாக கம்ப ராயப்பெருமாள் கோயிலில் இருந்த உற்சவர், ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, அன்று மாலை 4 மணியளவில் முக்கொம்பு மற்றும் கரகம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. கோயிலில் உள்ள கம்பத்தில் இணைத்து முக்கொம்பு கட்டப்பட்டது. முக்கொம்பிற்கு புது வஸ்திரம் உடுத்தி, மஞ்சள் நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் தினமும் மஞ்சள் நீர் ஊற்றி அம்மனை வணங்கி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒரு சமூகத்தினர் மண்டகப்படி நடைபெறும். தினமும் அம்மன் விதவிதமான அலங்காரத்துடன் வீதி உலா வருகிறார்.

21 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் முத்தாய்ப்பாக மே 5 ல் மாவிளக்கு, ஆயிரம் கண் பானை எடுத்தல், மே 6 ல் பொங்கல் வைத்தல், அக்னி சட்டி எடுத்தல், பூக்குழி இறங்குதல் , முளைப் பாரி ஊர்வலம் நடைபெறும்.

சித்திரை திருவிழாவில் கம்பம், சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய அக்னிசட்டி எடுத்து நேர்த்தி கடன் செலுத்துவார்கள். திருவிழாவில் அன்னதானம், நீர்மோர் வழங்குதல், கலை நிகழ்ச்சிகள் களைகட்டி வருகிறது. விழா ஏற்பாடுகளை கிராம கமிட்டியும், ஹிந்து அறநிலைய துறையினர் செய்து வருகின்றனர்.

Advertisement