அருணா அசப் அலி மருத்துவமனையில் முதல்வர் ரேகா ஆய்வு
புதுடில்லி:டில்லியில் உள்ள அருணா அசப் அலி அரசு மருத்துவமனையில், டில்லி முதல்வர் ரேகா குப்தா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அந்த மருத்துவமனையில் கோடை கால சிறப்பு மருத்துவ வசதிகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
டில்லி பா.ஜ., முதல்வர் ரேகா குப்தா, வடக்கு டில்லி மாவட்டத்தில், சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள அருணா அசப் அலி அரசு மருத்துவமனையில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர், அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகளிடம் பேசினார். பின், அந்த மருத்துவமனையில் செய்யப்பட்டிருந்த சில வசதிகளை இன்னும் மேம்படுத்த உத்தரவிட்டார்.
குறிப்பாக, கோடை கால சிகிச்சைகளை மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டார். அதற்காக, குடிநீர், மருந்துகள் போன்றவற்றை இருப்பு வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
பின் அவர் நிருபர்களிடம் கூறும் போது,''கோடை கால சுகாதார பணிகளை மேற்கொள்ளுமாறு, அருணா அசப் அலி மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை கேட்டுக் கொண்டேன்.
''ஒவ்வொரு அரசு மருத்துவமனையும் சேவையில் மையமாகவும், அறிவார்ந்த மற்றும் நேர்மையின் இருப்பிடமாகவும் விளங்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன்,'' என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.