மரத்தில் ஆணி அடித்து பதாகைகள் வைப்பதால் பட்டு போகும் பரிதாபம்: மரங்களை பாதுகாக்க வலியுறுத்தல்

பெரியகுளம்:பெரியகுளத்தில் ரோட்டோரங்களில் வளர்ந்துள்ள மரங்களில் ஆணி அடித்து பதாகைகள் தொங்கவிடுவதால் மரங்கள் பட்டு போகும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

வெயிலின் அருமை நிழலில் தெரியும் என உணர்வுபூர்வமான வார்த்தைகளை பலரும் தற்போது உணர்த்திருப்பர். தனியார் நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்கள் ரோட்டோரம் வளர்ந்துள்ள புங்கை, பூவரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் பராமரிக்கும் புளிய மரங்களில் இரவில் ஆணி அடித்து விளம்பர பதாகைகளை மாட்டி செல்கின்றனர். ஒரு மரங்களை கூட விட்டு வைக்காமல் ஆணி அடித்து விளம்பரங்களை தொங்க விடுகின்றனர் கேபிள் ஒயர்களை மரத்தில் கம்பிகளால் கட்டி வைக்கின்றனர். பெரும்பாலும் 50, 60 ஆண்டுகள் பழமையான மரங்களில் ஆணியடிப்பதால் மரப்பட்டைகள் சேதமாகி, காலப்போக்கில் பல இடங்களில் மரத்தில் ஓட்டை விழுகிறது. பின் மரங்களை பட்டு போகிறது. ஏற்கனவே ரோட்டோரத்தில் இருந்த பெரும்பாலான மரங்கள் ரோடு விரிவாக்கம், பராமரிப்பு இல்லாத காரணங்களால் மரங்கள் வெட்டப்படுகின்றன. இந்நிலையில் ஒரு சில இடங்களில் இருக்கும் மரங்களிலும் ஆணி அடித்து விளம்பரப்பதாகைகளை தொங்க விடுவதால் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

முன்பெல்லாம் கோடை வெயிலில் நடந்தும், வாகனங்களில் செல்பவர்கள் சிறிது நேரம் மரங்களின் நிழலில் இளைப்பாறி விட்டு செல்லும் நிலை இருந்தது. தற்போது அங்கொன்றும், இங்கொன்றும் மரங்களை தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. மரத்தில் ஆணி அடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

--

Advertisement