பழையசீவரத்தில் சுகாதார நிலையம் ஏற்படுத்த மக்கள் கோரிக்கை

வாலாஜாபாத்:பழையசீவரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாலாஜாபாத் ஒன்றியம், பழையசீவரம் ஊராட்சியில், 5,000 பேர் வசிக்கின்றனர். இப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தோர், மருத்துவ சிகிச்சைக்கு செங்கல்பட்டு அல்லது வாலாஜாபாத் போன்ற பகுதிகளுக்கு செல்கின்றனர்.

இடைவெளி தூரம் காரணமாக கர்ப்பிணியர் அவதிப்படுகின்றனர். குழந்தைகள் மற்றும் முதியோர் அவசரகால சிகிச்சைக்கு அவதிபடும் நிலை உள்ளது.

மேலும், பழையசீவரம் பாலாற்றங்கரையொட்டி மறுபுறம் பல கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களைச் சேர்ந்தோரும், அவசர, ஆபத்து நேரங்களில் பழையசீவரம் வந்து அங்கிருந்து பேருந்து பிடித்து, காஞ்சிபுரம் அல்லது செங்கல்பட்டில் உள்ள மருத்துவமனைக்கு செல்கின்றனர்.

இதனால், பழையசீவரத்தை சுற்றி உள்ள பல கிராம மக்களும் உரிய நேரத்தில் தேவையான சிகிச்சை கிடைக்காமல் பல்வேறு பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

எனவே, பழையசீவரம் பகுதியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement