'மெமு' வகை பயணியர் ரயில்களில் 12 பெட்டிகளாக உயர்த்த கோரிக்கை
சென்னை:'மெமு' எனப்படும் குறுகிய துாரம் செல்லும் பயணியர் ரயில்களில், ஒன்பது பெட்டிகளை, 12 பெட்டிகளாக அதிகரிக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட புறநகர் பகுதிகளுக்கு தினமும், 450க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இது தவிர, காட்பாடி - அரக்கோணம்; சென்னை கடற்கரை - மேல்மருவத்துார், திருத்தணி - சென்ட்ரல், பித்ரகுண்டா - சென்ட்ரல் உட்பட பல்வேறு தடங்களில், 10க்கும் மேற்பட்ட 'மெமு' வகை ரயில்கள் இயக்கப்படுகின்றன.
மொத்தம் ஒன்பது பெட்டிகளே இணைக்கப்பட்டி இருக்கும். இவை அனைத்து குறுகிய துார பயணியர் ரயில்களாக இயக்கப்படுகின்றன. ஒன்பது பெட்டிகளாகவே இருப்பதால், கூட்ட நெரிசலில் சிக்கி பயணியர் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து, ரயில் பயணியர் சிலர் கூறியதாவது:
ஒன்பது பெட்டிகள் கொண்ட 'மெமு' வகை ரயில்களில் இடநெருக்கடி ஏற்படுகிறது. குறிப்பாக, பயணியர் ஏறி, இறங்கும் கதவுகள் பகுதி மிகவும் குறுகியதாக இருக்கிறது. பெட்டிகளின் உள்ளே நீண்ட துாரத்துக்கும் இருக்கைகள் இருக்கின்றன.
இதனால், நெரிசல் மிக்க நேரத்தில் பயணியர் நிற்கக்கூட முடியவில்லை. கழிப்பிடமும் துாய்மையாக இல்லை. இட நெருக்கடியாக உள்ள இந்த வகை ரயில்களை, அலுவலக நேரங்களில் இயக்குவதை தவிர்த்து, 12 பெட்டிகளை கொண்ட மின்சார ரயில்களை அதிகரிகரித்து இயக்க வேண்டும்.
கோரிக்கை மனுவை, தெற்கு ரயில்வேயிடம் அளித்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
***