அழுத்தத்திற்கு பயந்து பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்; ஈரான் அதிபர் திட்டவட்டம்

7


டெஹ்ரான்: அழுத்தத்திற்கு பயந்து பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 28ம் தேதி முதல் அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் துவங்கி நடந்து வருகிறது. இந்தத் தாக்குதல் காரணமாக ஹார்மூஸ் ஜலசந்தியை முடக்கி, சர்வதேச அளவில் எரிசக்தி பற்றாக்குறையை ஈரான் ஏற்படுத்தியது. இதனிடையே, பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, மே 1ம் தேதி வரை போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.


முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், போர் நிறுத்தம் தொடர்பான 2ம் கட்ட பேச்சு நடத்துவதற்காக, ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தலைமையிலான குழுவினர் பாகிஸ்தான் சென்றனர். அமெரிக்க குழுவினரும் பாகிஸ்தான் வருவதாக இருந்தது. இந்த நிலையில், அமெரிக்க குழுவின் பாகிஸ்தான் பயணத்தை அதிபர் டிரம்ப் ரத்து செய்தார்.



இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் தொலைபேசியில் பேசிய போது, அமெரிக்கா அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என ஈரான் அதிபர் விமர்சித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:


அமெரிக்கா போர் நிறுத்த உடன்படிக்கைகளை மீறுகிறது. இது ஐநா சாசனத்திற்கு முரணானது. தேசிய பாதுகாப்பை பேணுவதில் ஈரான் உறுதியாக உள்ளது. அழுத்தத்திற்கு பயந்து பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம். இவ்வாறு ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் கூறினார்.

Advertisement