ஓட்டுப்பதிவின்போது ஆங்காங்கே தாமதம்; வாக்காளர்கள் வாக்குவாதம் * ஓட்டளித்த மூதாட்டி மீது கத்திவீச்சு

மதுரை: மதுரை மாவட்டத்தின் 10 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவின்போது சில இடங்களில் மின்னணு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டு ஓட்டுப்பதிவு தாமதம் ஆனது. வாக்காளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சோழவந்தான் தொகுதி அலங்காநல்லுார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 5 ஓட்டுப்பதிவு மையங்கள் இருந்தன. இதில் பூத் எண் 205ல் மின்னணு இயந்திர கோளாறால் ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது. காலை 9:05 மணிக்கும் மீண்டும் 9:50க்கும் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவு செய்யப்படும் ஓட்டுகள் விபி பேட் இயந்திரத்தில் காட்டப்படாதது, ஒலி எழுப்பாதது என பழுது ஏற்பட்டது. இதனைதொடர்ந்து தொழில்நுட்ப அலுவலர்கள் இயந்திரத்தை சரி செய்தனர். இந்த இயந்திர பழுதால் மொத்தம் 50 நிமிடம் ஓட்டுப்பதிவு பாதித்தது. இதனால் நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருந்து அவதிக்குள்ளான வாக்காளர்கள் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

* மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட கோச்சடை சாந்தி சதன் அப்பார்ட்மென்டில் முதன் முதலாக அமைக்கப்பட்ட ஓட்டுச்சாவடியில் வாக்காளர்களுக்கு சந்தனம், குங்குமமிட்டும், சாக்லேட் கொடுத்தும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

* மேலுார் தொகுதி திருச்சுனையில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதானதால், 15 நிமிடம் காலதாமதமாக ஓட்டுப்பதிவு தொடங்கியது.

* மதுரை மேற்கு தொகுதி ஜெய்ஹிந்த்புரம் யாதவா மெட்ரிக் பள்ளி ஓட்டுச்சாவடியில் மின்னணு இயந்திர கோளாறால் ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது. சரிசெய்யப்பட்டு துவங்கிய சிறிது நேரத்தில் பதிவு இயந்திரத்தில் பதிவு செய்யப்படும் ஓட்டுகள் 'விவிபேட்' இயந்திரத்தில் காட்டப்படவில்லை என வாக்காளர்கள் புகார் அளித்தனர். சிறிது நேரத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரம் சரி செய்யப்பட்டதோடு புதிய 'விவிபேட்' இயந்திரம் மாற்றப்பட்டு ஓட்டுப்பதிவு தொடர்ந்தது.

* திருப்பரங்குன்றத்தின் பல்வேறு பூத்துகளில் குடிநீர் வசதி இல்லாமல் வாக்காளர்கள் அவதியடைந்தனர்.

* மதுரை கிழக்கு மாங்குளம் பகுதி ஓட்டுச்சாவடியில் வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு செய்வதற்கு ஏதுவாக, விளக்குகள் எதுவும் அமைக்காததால் அதிகாரிகளுடன் ஓட்டுச்சாவடி முகவர்கள், வாக்காளர்கள் வாக்குவாதம் செய்தனர்.

* மதுரை கிழக்கு நாகனாகுளம் அரசு பள்ளி முன் தி.மு.க., வினர் 100 மீட்டர் எல்லைக்குள் வாக்காளர்களை 'கேன்வாஸ்' செய்ததையடுத்து, அவர்களை போலீசார் விரட்டினர்.

* மேலுார் கருத்தபுளியம்பட்டியில் திருமணம் முடிந்த கையோடு வந்த தம்பதியினர் அங்குள்ள அரசு பள்ளி ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தனர்.

* திருமங்கலம் மேலக்கோட்டையில் ஓட்டளித்துவிட்டு காத்திருந்த மூதாட்டி மீது கத்தி வீசப்பட்டதில் காலில் காயம் ஏற்பட்டது. குடிபோதையில் வீசிய பாலமுருகன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

* மதுரை தெற்கு தொகுதி சவுராஷ்டிரா ஆண்கள் பள்ளியில் காலை 8:00 மணிக்கு இயந்திரம் பழுதடைந்தது. இதனால் காலை 9:00 மணி வரை ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டதால் மக்கள் நீண்ட நேரம் நின்றனர். மீண்டும் இதே பூத்தில் காலை 10:30 மணிக்கு வைக்கப்பட்ட 2வது இயந்திரமும் பழுதடைந்தது. இதனால் மீண்டும் அரை மணி நேர தாமதத்திற்கு பின் 3வது இயந்திரம் வைக்கப்பட்டது. இதனால் கூட்டம் குறையாமல் வரிசை தொடர்ந்தது.

* அரசு பஸ் கண்டக்டர், டிரைவர்களுக்கு தினமலர் செய்தி எதிரொலியாக மதுரை கோட்டத்தில் 350 பணியாளர்கள் தபால் ஓட்டளித்தனர்.

Advertisement