வானில் பறக்கும்போது வீடியோ எடுத்த விமானிக்கு அபராதம்

சியோல்:'செல்பி' மோகம் சாமானியர்களை மட்டுமல்ல, போர் விமானம் ஓட்டும் விமானிகளையும் விட்டு வைக்கவில்லை என்பதற்கு சான்றாக, தென்கொரியாவில் ஒரு வினோத சம்பவம் நடந்துள்ளது.

கிழக்கு ஆசிய நாடான தென்கொரிய விமானப்படையைச் சேர்ந்த ஒரு 'பைலட்', 2021ம் ஆண்டு தன் பணி மாற்றத்திற்கு முன்பாக, கடைசி விமான பயணத்தை நினைவாக மாற்ற விரும்பினார். இதற்காக அருகில் பறந்த மற்றொரு விமானத்தின் பைலட்டிடம் தன்னை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும்படி கூறியுள்ளார்.

அப்போது மணிக்கு 578 கி.மீ., வேகத்தில் எப் -15 ரகப் போர் விமானத்தை இயக்கினார். வீடியோவில் தன் விமானம் மிக அழகாகத் தெரிய வேண்டும் என்பதற்காக, அவர் தன் ஜெட் விமானத்தை, 137 டிகிரி கோணத்தில் தலைகீழாகத் திருப்பி சாகசம் செய்துள்ளார்.

ஆனால் எதிர்பாராத விதமாக, அவரது விமானத்தின் வால் பகுதி அருகில் பறந்த மற்றொரு விமானத்தின் இறக்கையின் மீது பலமாக மோதியது. இந்த மோதலில் பெரும் விபத்து நேரிட வாய்ப்பிருந்தும், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. இரண்டு விமானங்களும் பத்திரமாக தரை இறக்கப்பட்டன.

விமானியின் இந்த அஜாக்கிரதையால் போர் விமானங்களுக்கு ஐந்தரை கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் இந்த முழுத் தொகையையும் அந்தப் பைலட்டே கட்ட வேண்டும் என்று அந்நாட்டு ராணுவ அமைச்சகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ததால் அபராதம் 55 லட்சம் ரூபாயாக குறைக்கப்பட்டது.

Advertisement