முதல் ஓட்டு; முதல் பெருமை: மதுரை இளம் வாக்காளர்கள் பரவசம்

மதுரை: சட்டசபை தேர்தலில் கல்லுாரி மாணவ, மாணவியர் ஆர்வமுடன் தங்கள் முதல் ஓட்டை பதிவு செய்தனர். ஓட்டுச்சாவடிக்கு சென்ற அனுபவம் குறித்து அவர்கள் கூறியதாவது:

* ஆசையும், ஆர்வமும் முதன்முதலாக ஓட்டுச்சாவடிக்கு சென்றபோது, நாமும் ஒரு அரசை தேர்ந்தெடுக்க ஓட்டளிக்க போகிறோம் என்ற ஆவல் இருந்தது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே எனது பெற்றோர் தெரிவித்திருந்ததால், அதை பார்க்கும் ஆசையும், ஆர்வமும் இருந்தது. ஓட்டுச்சாவடிக்குள் சென்றதும் விரலில் 'மை' வைத்ததும் முதன்முறையாக ஜனநாயக கடமையை நிறைவேற்ற போகிறோம் என்ற உணர்வுடன் என் ஓட்டை பதிவு செய்தேன். முதல் ஓட்டு, முதல் பெருமையாக எனக்கு இருந்தது.

- எஸ். அனுபாலா 19, பரவை.

* 'மிஸ்' பண்ணாமல் ஓட்டளித்தேன் கடந்த லோக்சபா தேர்தலின்போது ஓட்டுப்பதிவை 'மிஸ்' பண்ணிவிட்டேன். இம்முறை பெரும் எதிர்பார்ப்புடன் ஓட்டளித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. பாலியல் வன்கொடுமை தவிர்ப்பதுடன், பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும். எந்தப் பிரச்னை என்றாலும் அதற்கு உடனே நடவடிக்கை வேண்டும். மதுரை ஸ்மார்ட் சிட்டியாக இருக்க சாக்கடை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும், தெருக்களில் சி.சி.டி.வி., கண்காணிப்பு வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் ஓட்டளித்தேன்.

- -டி. ஹரிஷ்மா 22, ஆத்திக்குளம்.

* படபடவென்று இருந்தது ஓட்டுச்சாவடிக்கு உள்ளே செல்லும் போது படபடவென்று இருந்தது. தெரியாத்தனமாக வேறு சின்னத்தில் மாற்றி அழுத்தி விடுவோமோ என்று பயமாக இருந்தது. நான் எதிர்பார்த்த சின்னம் எதுவென இரண்டு முறை சரிபார்த்த பின்பே ஓட்டளித்தேன். அதன்பின் நான் பட்டன் அழுத்திய சின்னம் தான் இருக்கிறதா என்று சிறிய துண்டுச்சீட்டிலும் காட்டியதை பார்த்தபின்பே நிம்மதியானேன்.

- - எம்.ரியாஷ் 19, முனிச்சாலை.

* சிந்தித்து ஓட்டளித்தேன் மதியம் 12:00 மணிக்கு போன போது கூட்டம் இல்லை. கொஞ்சம் 'ரிலாக்ஸ்' ஆக இருந்தது. ஒவ்வொருவரின் ஓட்டும் தான் அடுத்த ஐந்தாண்டுக்கு யார் எம்.எல்.ஏ., என்பதை தீர்மானிக்கும். அவர்கள் நல்லது செய்வார்களா என்பதை சிந்தித்துத் தான் ஓட்டளித்தேன். தவறான நபரைத் தேர்ந்தெடுத்தால் நஷ்டம் நமக்குத் தான் என்பதை புரிந்து கொண்டேன்.

- எம்.சபேஷ் 22, காமராஜர் ரோடு.

* ஜனநாயக கடமை முதன்முறையாக ஓட்டு செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல் ஒவ்வொரு தேர்தலிலும் ஜனநாயக கடமை நிறைவேற்றுவேன். ஒவ்வொருவரும் தங்களுக்குரிய வேலைகளை ஒதுக்கி அத்தியாவசிய கடமையான ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும். என் ஓட்டு என் உரிமை என்றார்.

- கற்பகம் 19, மேலுார்.

* அலட்சியம் செய்யாமல் ஓட்டளிக்க வேண்டும் 'நுாறு சதவீத ஓட்டு' என்பதில் என்னுடைய பங்கும் இருப்பதை நினைத்து பெருமை கொள்கிறேன். நம்மை ஆள்பவர்களை தேர்வு செய்யும் உரிமை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் கிடைக்கிறது. அதை அலட்சியம் செய்யாமல் ஒவ்வொருவரும் ஓட்டளிக்க வேண்டும். முதல்முறையாக ஓட்டளித்துள்ளேன். ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுவேன். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை பெருக்க வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு.

- திவ்யதர்ஷன் 22, திருமங்கலம்.

* ஓட்டளித்ததில் திருப்தி முதல் முறை ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக ஊரில் இருந்து உசிலம்பட்டிக்கு சிரமப்பட்டு வந்தேன். ஓட்டளித்தது எல்லாம் புதுமையான அனுபவமாக இருந்தது. அலுவலர்கள் ஒவ்வொன்றாக விளக்கி கூறினர். ஓட்டுப்பதிவு மிஷினை முதன்முறையாக அருகில் இருந்து பார்த்தது வித்தியாசமாக இருந்தது. நான் ஓட்டுப்பதிவு செய்த சின்னம் சிறிய டிஸ்பிளேவில் சில வினாடிகள் வந்த போது, ஜனநாயக கடமையை பதிவு செய்த திருப்தியில் சிரமம் மறந்து போனது.

- ரா. கேரன், உசிலம்பட்டி.

* வேட்பாளர்கள் தகுதி அறிந்து ஓட்டளித்தேன் முதல் முறையாக ஓட்டளித்ததும் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். ஓட்டளிப்பதற்கு முன்பாக ஓட்டுச்சாவடியில் ஒட்டியிருந்த வேட்பாளர்கள் மற்றும் விழிப்புணர்வு நோட்டீஸ்களை படித்துப் பார்த்தேன். வேட்பாளர்களின் படிப்பு, தகுதி, அவர்கள் பற்றியும் ஏற்கனவே இணையத்திலும் அறிந்து வைத்திருந்தேன். இந்த விவரங்களுடன் சென்ற போது ஓட்டுச்சாவடியில் அதிக கூட்டம் இல்லாததால் பொறுமையாக சிந்தித்து ஓட்டளித்தேன்.

- எம்.சத்யவாணி 20, கீழவாசல்.

* புதுமையும், ஆச்சரியமும் முதல் முறையாக ஓட்டளிக்க இருந்ததால் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தேன். ஓட்டளிக்க வரிசையில் நின்ற போது அச்சம் ஏற்பட்டது. ஓட்டுப் பெட்டியைப் பார்த்தபோது புதிதாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. ஓட்டளிக்க பட்டனை அழுத்தியதும் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தேன். மிகவும் புதுமையான அனுபவம். முதல்முறையாக ஜனநாயக கடமை ஆற்றியதில் எனக்கு ஆனந்தம்.

- - ஜி. ஷியாமளா தேவி 20, திருப்பரங்குன்றம்.

* ஓட்டுரிமையை விட்டுக் கொடுக்கக்கூடாது முதல்முறையாக ஓட்டளிக்க இருந்ததால் பதட்டமாக இருந்தது. அருகில் உள்ளவர்கள் வழிகாட்டினர். ஜனநாயக கடமை ஆற்றியதில் மகிழ்ச்சி. ஓட்டுரிமையை எதற்காகவும், யாருக்காகவும் விட்டுக் கொடுக்கக்கூடாது. காசுக்கும் விற்கக்கூடாது. கல்வி, வேலைவாய்ப்பில் இளைஞர்களுக்கான திட்டங்கள் அதிகரிக்க வேண்டும்.

- - மணிகண்டன் 19, திருமங்கலம்.

* என் முடிவுப்படி ஓட்டு நான் இன்ஜி., படிக்கிறேன். முதன் முறையாக ஓட்டு அளிக்கப் போகிறோம் என்ற உணர்வு உற்சாகமாக தான் இருந்தது. வரிசையில் காத்திருந்து ஓட்டளித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என வேட்பாளர்கள் குறித்து ஏற்கனவே அம்மாவிடம் கேட்டு கொஞ்சம் தெரிந்துகொண்டேன். யார் 'பெஸ்ட்' என முடிவு செய்து ஓட்டளித்தேன்.

- ஸ்ரீ ரோஷினி 21, புதுார் கற்பகம் நகர்.

* மறக்க முடியாத தருணம் நாகர்கோவிலில் படிக்கிறேன். எனக்கு ஒரு பொறுப்பு உள்ளது என நினைத்தேன். அதற்காகவே ஆர்வத்துடன் மதுரை வந்தேன். இந்த தேர்தலில் இளைஞர்களிடம் ஓட்டளிக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. வீட்டிலும், கல்லுாரியிலும் அரசியல் குறித்து பேசும் சூழல் உள்ளது. இதனால் அரசியல் குறித்த விழிப்புணர்வும் எங்களை போன்றவர்களுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் வேலைவாய்ப்பு குறித்து அரசியல்வாதிகளின் சிந்தனையில் வருவதில்லை. எதிர்காலத்திற்கு யார் தேவையோ அக்கட்சிக்கு என் முதல் ஓட்டை பதிவு செய்தேன்.

- - பங்கஜ ரோஷினி 19, புதுார்.

* ரொம்ப பெருமையா இருக்கு முதல் தடவை ஓட்டளித்தது புதிய அனுபவமா இருந்தது. நானும் ஒரு எம்.எல்.ஏ.,வை தேர்ந்தெடுக்கிறோம் என்று நினைக்கும்போது ரொம்ப பெருமையா இருக்கிறது. ஓட்டு இயந்திரத்தோட பட்டனை அழுத்தும்போது பதட்டமா இருந்தது. ஓட்டளித்துவிட்டு வெளியே வந்தவுடன் சாதிச்ச மாதிரி 'பீல்' பண்ணினேன். ஓட்டளிக்க வேண்டும் என்பதற்காக நிறைய விஷயங்களை தெரிஞ்சுகிட்டேன்.

- தருணிகா 19, சோழவந்தான். * பொறுப்பு வந்ததாக உணர்ந்தேன் ஓட்டு அளிப்பதைப் பற்றி அப்பா, அம்மா சொல்லிதான் கேள்விப்பட்டு இருக்கிறேன். முதல் முறையாக ஓட்டு அளிப்பதை நினைத்து பதட்டமாகவே இருந்தது. நானே சொந்தமாக, தெளிவாக முடிவெடுத்து ஓட்டைப் பதிவு செய்தது ரெம்பவே ஹேப்பியா இருக்கு. அதிலேயும் கையில் மை வைக்கும் போது இருந்த எனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இத்தனை நாள் என்னை சின்னப் பிள்ளையாக நினைச்சிட்டு இருந்தேன். இப்ப ஓட்டைப் பதிவு செய்ததும் சமூக பொறுப்புள்ள ஒருத்தியாக என்னை உணர வைத்தது ரெம்பவே பெருமையாக இருக்கிறது.

-- - ரமிலா 19, சோழவந்தான்.

* தேர்வு எழுதின மாதிரி இருக்கு முதல் முறையா ஓட்டளித்தது தேர்வு எழுதிட்டு வந்த மாதிரி இருந்தது. பயம், பதற்றம், மகிழ்ச்சி எல்லாம் கலந்த 'பீல்' இருக்கு. நம்மள ஆட்சி செய்யப் போற தலைவர்கள நானும் தேர்ந்தெடுக்குறேனு நினைக்கிறப்ப மகிழ்ச்சியா இருந்தது. எனக்கு சில கட்சிகள் பற்றிதான் தெரியும். ஆனா இவ்வளவு சுயேச்சைகள் போட்டியிடுவாங்கன்னு ஓட்டுச்சாவடிக்கு போனப்பதான் தெரிஞ்சுகிட்டேன்.

-- - - ஹேமபிரபா 20, சோழவந்தான்.

* யோசித்து ஓட்டளித்தேன் முதல் ஓட்டு யாருக்கு அளிக்க வேண்டும் என்ற குழப்பம் இருந்தது. ஆனால் யார் ஆட்சிக்கு வந்தால் எங்களுக்கான எதிர்கால தலைமுறை நன்றாக இருக்கும் என யோசிச்சு பார்த்து ஒரு வேட்பாளரை தேர்வு செய்தேன். இப்போதுள்ள அரசியலில் ஒரு 'பெட்டர்' வேண்டும். குறிப்பாக கல்விக்கு இன்னும் முக்கியத்துவம் தரும் ஆட்சி, விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைத்து, சட்டம் ஒழுங்கை சரியாக பராமரித்து அமைதியான மாநிலமாக வேண்டும். அதற்கான ஆட்சி செய்யும் ஒருவரை தேர்வு செய்துள்ளேன்.

- தேஜஸ்வினி 19, அய்யர்பங்களா.

* சமூக பொறுப்புணர்வுடன் ஓட்டு முதல் ஓட்டு என்றும் நினைவாக இருக்கும் என்பதால் பெற்றோரிடம் ஆலோசித்தேன். குறிப்பாக நல்லாட்சியை தரும் அரசியல் தலைவர்களை இளைஞர்கள் சமுதாயம் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதன்படி தற்போது போட்டியிடும் கட்சிகளில் எந்த கட்சி அதிக திட்டங்களை தந்துள்ளது. வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி எது. பெண்கள் மேம்பாட்டிற்காக திட்டமிடும் கட்சி எது என ஆராய்ந்து என் ஓட்டை பதிவு செய்தேன்.

-தேவிகா ஜோ 21, அண்ணாநகர்.

Advertisement