சாதனை படைத்தது எப்படி?

திருப்பூர்:திருப்பூர் மாவட்ட தேர்தல் வரலாற்றில் இதுவரை கண்டிராத வகையில் 88.48 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்று புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி உயர்வுக்குப் பின்னால் தேர்தல் கமிஷன் மேற்கொண்ட 'சுருக்கமுறை திருத்தம்' மற்றும் 'எஸ்.ஐ.ஆர்' எனும் தீவிர களப்பணியே முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

சவாலாக இருந்த இரட்டைப் பதிவு



பின்னலாடை நகரமான திருப்பூரில் வெளியூர் தொழிலாளர்கள் அதிகம் என்பதால், சொந்த ஊர் மற்றும் திருப்பூர் என இரண்டு இடங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பது பெரும் சவாலாக இருந்தது. இதனால் ஒவ்வொரு தேர்தலிலும் 70 சதவீத வாக்குப்பதிவைத் தொடுவதே குதிரைக்கொம்பாக இருந்தது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 70.12% மற்றும் 2024 லோக்சபா தேர்தலில் 70.57% மட்டுமே பதிவாகியிருந்தது.



எஸ்.ஐ.ஆர் கொடுத்த 'ஷாக்' ட்ரீட்மென்ட்



வாக்காளர் பட்டியலைச் சுத்தப்படுத்த 2025 இறுதியில் கொண்டு வரப்பட்ட சிறப்பு தீவிர திருத்தம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.



அதிரடி நீக்கம்: இரட்டைப் பதிவு, இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் என அதிரடியாக 5.63 லட்சம் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டன. இது மாவட்ட மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 23 சதவீதம் ஆகும்.



புதிய பட்டியல்: 24.44 லட்சமாக இருந்த வாக்காளர் எண்ணிக்கை, வடிகட்டப்பட்டு 19.55 லட்சமாகச் செம்மைப்படுத்தப்பட்டது.



தற்போதைய நிலவரம்: தேர்தலுக்கு முன் புதிய சேர்க்கை மற்றும் நீக்கங்களுக்குப் பிறகு, 19,83,882 வாக்காளர்களுடன் இறுதிப் பட்டியல் தயார் செய்யப்பட்டது.



சாதனைக்குக் காரணமான 3 'பிளான்'கள்



வடிகட்டப்பட்ட பட்டியல்: போலிகள் நீக்கப்பட்டதால், உண்மையான வாக்காளர்களின் எண்ணிக்கை துல்லியமானது.



கூடுதல் சாவடிகள்: ஓட்டுச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டதால், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது.



அடிப்படை வசதிகள்: அக்னி வெயில் வாட்டியபோதும், சாமியானா பந்தல், குடிநீர் வசதிகள் கச்சிதமாக இருந்ததால் மக்கள் சளைக்காமல் வந்து வாக்களித்தனர்.



18.5 சதவீதம் கூடுதல் எழுச்சி

செம்மையான வாக்காளர் பட்டியல் மற்றும் தொடர் விழிப்புணர்வு காரணமாக, முந்தைய தேர்தல்களை விட இந்த முறை 18.5 சதவீதம் கூடுதலாக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் பெருமிதத்துடன் தெரிவிக்கின்றனர். 17.55 லட்சம் பேர் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றியதன் மூலம், திருப்பூர் மாவட்டம் தமிழகத்திற்கே ஒரு முன்னுதாரணமாக மாறியுள்ளது.

Advertisement