இடுகாடு பிரச்னைக்கு தீர்வு காணாததால் தேர்தலை புறக்கணித்த வாக்காளர்கள் போலீசார் அறிவுறுத்தலை ஏற்று ஓட்டு போட்டனர்
கோட்டக்குப்பம்: மீனவர்கள் படகை நிறுத்த பயன்படுத்தி வரும் சுடுகாடு இடப்பிரச்னைக்கு தீர்வு காணாததால் தேர்தலை புறக்கணித்த பெரிய கோட்டக்குப்பம் ஆதிதிராவிடர் பகுதி வாக்காளர்கள் போலீசாரின் அறிவுத்தலை ஏற்று ஓட்டு போட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், வானுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட கோட்டக்குப்பம் ஆதிதிராவிடர் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதியில் நடுக்கும் மீனவ கிராமம் அமைந்துள்ளது.
பெரிய கோட்டக்குப்பம் ஆதிதிராவிடர் மக்களுக்கு நடுக்குப்பம் கடற்கரை அருகே ஒரு ஏக்கர் இடத்தில் இறந்தவர்களின் உடலை புதைக்கும் இடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர்.
இதே போன்று நடுகுப்பம் மீனவர்கள், தங்களது மீன் பிடி படகுகளை பெரிய கோட்டக்குப்பம் மக்கள் பயன்படுத்தும், இடுகாடு பகுதியில் நிறுத்தி வைத்து வருகின்றனர்.
அதற்கு பெரிய கோட்டக்குப்பம் ஆதிதிராவிடர் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஆதிதிராவிடர் மக்கள் பயன்படுத்தி வரும் இடுகாட்டை அப்புறப்படுத்தக் கோரி நடுக்குப்பம் மீனவர்கள், கடந்த வாரம் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகக் கூறி கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, ஓட்டுப்பதிவு செய்ய செல்வோரை தடுக்கக்கூடாது என அறிவுறுத்தினர்.
இந்நிலையில் நேற்று காலை 7;00 மணிக்கு பெரிய கோட்டக்குப்பம் 10 மற்றும் 11வது வார்டுகளில் மொத்தமுள்ள 2,189 ஓட்டுக்களுக்கு 3 ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டது.
ஆனால், நடுக்குப்பம் மீனவர்கள் படகை நிறுத்தி பயன்படுத்தி வரும் இடுகாடு இடபிரச்னைக்கு அரசு தீர்வு காணவில்லை எனக்கூறி பெரிய கோட்டக்குப்பம் பகுதியில் அமைக்கப்பட்ட ஓட்டுச்சாவடி மையத்தில் ஆதிதிராவிடர் பகுதி மக்கள் மட்டும் சட்டசபை தேர்தலை புறக்கணித்து ஒருவர் கூட ஓட்டளிக்க முன்வரவில்லை.
ஒரு ஓட்டுச்சாவடியில் மட்டும் பழைய பட்டினம் சாலையில் வசிக்கும் முஸ்லிம்கள் ஓட்டளித்தனர். இதனால் ஓட்டுச்சாவடி மையம் காலையில் இருந்து ஓட்டளிக்க ஆளில்லாமல் காற்று வாங்கியது.
மாலை 4:00 மணி வரை ஆதிதிராவிடர் மக்கள் வராததால், அச்சமின்றி ஓட்டளிக்கலாம் என போலீசார் மைக் மூலம் அறிவுறுத்தினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதியை சேர்ந்த சிலரை போலீசார் விரட்டி அடித்தனர். போலீசாரின் அறிவுறுத்தலை ஏற்ற அப்பகுதி மக்கள், மாலை 4:30 மணிக்கு ஓட்டளிக்க முன்வந்தனர்.
இறுதி நேரத்தில் 250க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் நின்றனர். மாலை 6;00 மணியைக் கடந்ததால், அவர்களுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரிகள் டோக்கன் வழங்கினர். இதனால் இரவு 7;00 மணிக்கு மேல் ஓட்டுப்பதிவு நீடித்தது. பதற்றம் ஏற்பட்டதால் கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.
தீக்குளிக்க முயற்சி இடுகாடு பிரச்னைக்கு அரசு தீர்வு காணாததால், சட்டசபை தேர்தலை புறக்கணித்து விட்டதாகவும், நடவடிக்கை எடுக்க தவறிய அரசை கண்டித்தும், நேற்று மதியம் ஓட்டுச்சாவடி மையம் அருகே மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வழக்கறிஞரான கார்த்திக், 36; என்பவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடன், அங்கிருந்த போலீசார், அவரை தடுத்தி நிறுத்தினர். இதனால், அங்கு பதற்றம் நிலவியது.
மேலும்
-
திரிணமுல் காங்கிரசின் அராஜக ஆட்சி; மம்தா அரசுக்கு ராகுல் கண்டிப்பு
-
2024 லோக்சபா தேர்தலை விட இம்முறை கூடுதலாக 50 லட்சம் பேர் ஓட்டளிப்பு
-
கொலம்பியாவில் பஸ்சில் குண்டுவெடிப்பு: 7 பேர் பலி; 20 பேர் காயம்
-
கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சி; ஆர்வத்துடன் செல்பி எடுத்துக்கொண்ட மக்கள்
-
உயிரியல் பூங்கா விலங்குகளை வெயிலில் இருந்து காக்க ஏற்பாடு
-
கணவர் சாவில் சந்தேகம்: விசாரிக்க மனைவி புகார்