ஓட்டுப்பதிவு இயந்திர அறைக்கு சீல் வைப்பு துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் பாதுகாப்பு

காரைக்குடி:காரைக்குடி அழகப்பா இன்ஜி., கல்லுாரியில் 4 சட்டசபை தொகுதிக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் ஏப். 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. சிவகங்கை மாவட்டத்தில் திருப்புத்தூர், காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை ஆகிய தொகுதிகளில் 1518 ஓட்டுச் சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. ஓட்டுப்பதிவு முடிந்து,

காரைக்குடியிலுள்ள ஓட்டு எண்ணும் மையத்திற்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் வாகனங்களில் பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டது. கல்லுாரியிலுள்ள முருகப்பா ஹாலில் மேல் தளம் ஒருபுறம் சிவகங்கை தொகுதிக்கும் மறுபுறம் மானாமதுரை தொகுதிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அருகிலுள்ள வரைபட கட்டடத்தில் கீழ் பகுதி காரைக்குடி தொகுதிக்கும், மேல் தளம் திருப்புத்தூர் தொகுதிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. நான்கு தொகுதிக்கும் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் கொண்டு வரப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டது . தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் பொற்கொடி, தேர்தல் பொது பார்வையாளர் ஷாமா பர்வீன் மற்றும் வேட்பாளர்கள் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பு அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

24 மணி நேரமும், 300 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் நடத்தும் அலுவலர் பொற்கொடி கூறுகையில்:

4 தொகுதிகளுக்கான ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் 4 தனித்தனி பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. 3 அடுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. போலீசார், வேட்பாளர்கள், பிரதிநிதிகள் கண்காணிப்பு கேமராக்களை கண்காணிக்க அறை ஒதுக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ள அத்தனையும் முறையாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement