பல ஆண்டுகளாக துார்வாரப்படாத கண்மாயில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து புதர்மண்டியுள்ள அவலம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கீழத்துாவல் கிராமத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக கண்மாய் துார்வாரப்படாமல் இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கீழத்துாவல் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். விவசாயம், கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில் நெல், மிளகாய், பருத்தி உள்ளிட்ட விவசாயம் செய்கின்றனர். இப்பகுதி விவசாயத்திற்கு பயன்படும் கண்மாய் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக துார்வாரப்படாமல் உள்ளது. இதனால் செடி, சீமை கருவேலம் மரங்கள் வளர்ந்து புதர்மண்டி உள்ளது.

மழைக்காலத்தில் தண்ணீரை சேமித்து வைக்க முடியவில்லை. வரத்துக்கால்வாய் மணல் மேடாகி இருந்த இடம் தெரியாமல் அழிந்து வருகிறது. இதனால் விவசாய காலங்களில் கண்மாயில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டு இழப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:

கீழத்துாவல் கிராமத்தில் கண்மாய் 57 ஹெக்டேரில் அமைந்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக துார்வாரப்படவில்லை. 15 அடிக்கு மேல் நாணல் செடிகள், சீமைக்கருவேலம் மரங்கள் வளர்ந்து புதர்மண்டி உள்ளது. வரத்து கால்வாய்கள் அழிந்துள்ளது. பருவமழை காலத்தில் பெய்யும் மழை நீரை கூட தேக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

இதனால் தண்ணீரின்றி விவசாயம் அழிகிறது. மழை நீரை சேமிக்க துார்வாரக் கோரி அதிகாரியிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் திறந்து விடப்படும் தண்ணீரும் கண்மாய்க்கு வருவதில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிராம மக்களிடம் பண வசூலித்து அபிராமம் பரளையாறு வரத்து கால்வாய் மக்களின் சொந்த நிதியில் அவ்வப்போது துார்வாரி தண்ணீர் கொண்டு வந்தாலும் கண்மாயில் தேக்கி வைக்க முடியவில்லை.

விவசாயிகள் சில ஆண்டுகளுக்கு முன்பு போர்வெல் அமைத்து தண்ணீர் பாய்ச்சி வந்தனர். காலப்போக்கில் 400 அடிக்கும் கீழ் உள்ள போர்வெல்கள் அனைத்தும் காட்சிப்பொருளாக மாறி உள்ளது. தற்போது 700 அடிக்கு மேல் போர் அமைத்தால் மட்டும் தான் தண்ணீர் வருகிறது. இதனால் விவசாயத்தை கைவிட்டு வெளி மாவட்டங்களுக்கு வேலைக்கு செல்கின்றனர். எனவே விவசாயிகளின் நலன் கருதி கீழத்துாவல் கண்மாயை துார்வார உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Advertisement