இடுக்கியில் கொளுத்தும் வெயில் ஏலச் செடிகளுக்கு தண்ணீர் தெளிப்பு

கம்பம்,:இடுக்கி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏலச் செடிகள் வாடாமல் இருக்க விவசாயிகள் தோட்டங்களில் உள்ள கிணறுகளில் இருந்து தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். தற்போது கிணறுகளிலும் நீர் மட்டம் குறைய துவங்கி உள்ளது.

இடுக்கி மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடியாகிறது. இந்தியாவில் ஏலக்காய் சாகுபடி அதிகம் நடைபெறும் மாவட்டம் இது மட்டுமேயாகும். இந்தியாவின் மொத்த உற்பத்தியில் இடுக்கி மாவட்டம் மட்டும் 80 சதவீதத்தை பகிர்ந்து கொள்கிறது.

ஏலக்காய் பறிப்பு முடிவிற்கு வந்து விட்டது. தற்போது தோட்டத்தை சுத்தம் செய்தல், கவாத்து அடித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெறும். அடுத்த சீசன் இன்னமும் 4 மாதங்களுக்கு பின் ஆகஸ்ட்டில் துவங்கும். பொதுவாக கோடையில் வெயிலின் தாக்கத்தால் செடிகள் வாடி கருகும். அதை தடுக்க தோட்டங்களில் உள்ள கிணறுகளில் இருந்து தண்ணீரை எடுத்து பாய்ச்சுவார்கள். மார்ச் முதல் மே வரை வெயிலின் தாக்கம் இருக்கும்.

ஆனால் இந்தாண்டு கடந்த 2 மாதமாக வெயில் உக்கிரமாக உள்ளது. செடிகளை காப்பாற்ற விவசாயிகள் தோட்டங்களில் உள்ள கிணறுகளில் இருந்து தண்ணீர் பாய்ச்ச துவங்கி உள்ளனர்.

இந்த கோடையை சமாளிக்க கிணறுகளில் உள்ள தண்ணீர் போதுமானதா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம் கிணறுகளில் நீர் மட்டம் மளமளவென குறைந்து வருகிறது.

தோட்டங்களில் காய் பறிப்பு பெரும்பாலும் கிடையாது. ஆனால் விற்பனைக்கு காய் வருகிறது. விலையை பொறுத்த வரை சராசரி கிலோ ரூ. 2600 ல் இருந்து 2700 வரை கிடைக்கிறது. மழை பெய்தால் தான் செடிகள் தப்பிக்கும் வரும் சீசனில் மகசூல் கிடைக்கும் என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.

Advertisement