சிவகங்கையில் சுகாதார பணியில் தொய்வு    * சாக்கடை கழிவால் நோய் பரவல்   

சிவகங்கை:சிவகங்கை நகராட்சியில் சாக்கடை கால்வாய் சீரமைப்பு பணியின்றி பாலிதீன் கழிவு, சாக்கடை நீர் தேங்கி மக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது.


சிவகங்கை நகராட்சியின் கீழ் 27 வார்டுகளில் 55,000 க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். இந்நகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம், சுகாதாரம் காக்க வீடுகள் தோறும் குப்பை சேகரித்தல், சாக்கடை கால்வாய்களில் குவிந்து கிடக்கும் குப்பை, கழிவுகளை அகற்ற வேண்டும். இப்பணிகளை செய்வதற்காக நகராட்சி மற்றும் தனியார் ஒப்பந்த பணியாளர்களாக 120 பேர் வரை உள்ளனர். ஆனால், பெரும்பாலான தெருக்களில் குப்பை சேகரிப்பதே இல்லை. சாக்கடை கால்வாயில் தேங்கியுள்ள கழிவுகளையும், பாலிதீன் பைகள், குப்பைகளால் அடைபட்டுள்ள கால்வாய்களை சுத்தம் செய்ய நகராட்சி அதிகாரிகள் அக்கறை காட்டுவதில்லை. நகரில் வரிவசூலில் தான் சுணக்கம் என்றால், நகராட்சி அதிகாரிகள் நகரில் சுகாதார பணிகளை மேற்கொள்வதிலும் அக்கறையே காட்டுவதில்லை என புகார் எழுந்துள்ளது.

* கழிவுகளால் நோய் பரவல்:

சிவகங்கை மேலரதவீதி சண்முகம் கூறியதாவது: சிவகங்கை மதுரை முக்கு முதல் திருப்புத்துார் ரோட்டில் உள்ள மேல ரதவீதியின் இருபுறமும் பல ஆண்டுகளுக்கு முன் சாக்கடை கால்வாய் கட்டினர். அவை இன்றைக்கு சிதிலமடைந்து காணப்படுகின்றன. இக்கால்வாய்களிலும் கழிவுநீர் செல்ல முடியாத அளவிற்கு பாலிதீன் கழிவுகள் தேங்கி கிடக்கின்றன. தேங்கும் கழிவுநீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் மூலம் இப்பகுதி மக்களுக்கு மலேரியா, வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவிவருகிறது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertisement