நீதிமன்றங்களுக்கு நிதானம் அவசியம்: சபரிமலை வழக்கில் பந்தளம் தரப்பு வாதம்

4

- டில்லி சிறப்பு நிருபர் -

'மத ரீதியான சடங்குகள், நம்பிக்கைகளில் தலையிடும்போது, நீதிமன்றங்கள் நிதானமாக செயல்பட வேண்டும்' என, சபரிமலை விவகாரத்தில் பந்தள அரச குடும்பம் சார்பில் வாதிடப்பட்டது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக் கோரும் வழக்கை தொடர்ந்து, மத உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் தொடர்பான ஏழு முக்கிய சட்டக் கேள்விகளை உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

உச்ச நீதிமன்றத்தில் நேற்று 8வது நாளாக நடந்த விசாரணையின்போது, பந்தள அரசு குடும்பத்தின் சார்பில் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் ஆஜரானார். அப்போது அவர் முன் வைத்த வாதம்:

நீதிமன்றத்தின் அதிகாரத்தை யாரும் கேள்வி கேட்க முடியாது. அதே சமயம், மத ரீதியான சடங்குகள், சம்பிரதாயங்களில் தலையிடும்போது நீதிமன்றங்கள் நிதானமாக செயல்பட வேண்டும்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தவர்கள், உண்மையான பக்தர்கள் அல்ல; மத நம்பிக்கை கொண்டவர்களும் அல்ல. அய்யப்பனை பற்றி அவதுாறான கருத்துகளை பரப்பியவர்கள். இவ்வாறு அவர் வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஜாய்மால்யா பக்சி, ''ஒரு நடைமுறை மதரீதியானது தானா என்பதை எப்படி உறுதி செய்வது? ஹிந்து மதத்திற்குள் ஆயிரக்கணக்கான நடைமுறைகள் உள்ளன. அவற்றை எந்த அளவுகோலை வைத்து சோதிப்பது?'' என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் ஜெய்ந்த முத்துராஜ், ''சைவ சமயத்தில் 63 நாயன்மார்கள் போற்றப்படுகின்றனர். அவர்களில் கண்ணப்ப நாயனார் மட்டும் இறைவனுக்கு இறைச்சியை படைத்து வழிபட்டு முக்தி அடைந்தார்.

'' வழக்கமான அபிஷேக ஆராதனைகளை அவர் மேற்கொள்ளவில்லை. ''வாயில் சுமந்து வந்த நீரையும், ருசி பார்த்து சோதித்த இறைச்சியையும் தான் படைத்தார். இது பொதுவான சடங்குகளுக்கு அப்பாற்றப்பட்டது. அதாவது ஒரு பக்தரின் ஆழ்ந்த நம்பிக்கையை பொறுத்தது.

''எனவே, ஒரு சடங்கு மதத்தின் இன்றியமையாத பகுதியா என ஆராய வேண்டிய அவசியம் நீதிமன்றத்திற்கு இல்லை. நம்பிக்கையற்ற ஒருவருக்கு இந்த விவகாரத்தில் தலையிடவும் உரிமை இல்லை,'' என்றார். வழக்கு விசாரணை வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

@block_B@

நீதிபதியால் சிரிப்பலை



உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடந்த விசாரணையின் போது, தவுதி போரா சமூகத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நீரஜ் கிஷன் கவுல், காங்கிரஸ் தலைவர் சசி தரூர் எழுதிய ஒரு கட்டுரையை மேற்கோள் காட்டி வாதிட்டார்.

அப்போது அவர், ''அறிவு என்பது எங்கிருந்து வந்தாலும், எந்தப் பல்கலை.,யில் இருந்து வந்தாலும் அதை நாம் வரவேற்க வேண்டும்,'' என்றார். இதற்கு பதிலளித்த நீதிபதி நாகரத்னா, ''ஆனால், 'வாட்ஸாப்' பல்கலை.,யில் இருந்து வரும் தகவல்கள் இங்கே செல்லாது,'' என நகைச்சுவையாகவும், அழுத்தமாகவும் குறிப்பிட்டார். இதனால், நீதிமன்றத்தில் சிரிப்பலை எழுந்தது.block_B

Advertisement