அன்புமணி, ராமதாஸ் வழக்கை விசாரிக்கும் சிவில் நீதிபதி மாற்றம்

சென்னை: பா.ம.க., தலைவர் அன்புமணிக்கு எதிராக, அவரது தந்தையும் கட்சி நிறுவனருமான ராமதாஸ் தொடர்ந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி உட்பட, 98 மூத்த சிவில் நீதிபதிகள் பணி மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

சென்னை சிறு வழக்குகள் நீதிமன்ற நீதிபதி கே.ஜோதி, தமிழ்நாடு மாநில ஜுடிசியல் அகாடமியின் துணைத் தலைவர் , துணை செயலராக இருந்த எஸ்.சந்தானகுமார், சென்னை உயர் நீதிமன்ற சொத்து பராமரிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதேபோல், சென்னை சிறு வழக்குகள் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.ஜெகதீசன், எஸ்.முத்துமுருகன், எம்.பாக்கியம் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

மேலும், சென்னை சிட்டி சிவில் நீதிமன்ற மூத்த சிவில் நீதிபதிகள் கே.சிவசக்தி கண்ணன், கே.நம்பிராஜன், எல்.மகேஸ்வரி, எஸ்.பிரியா, ஆர்.உமா, கே.சுதாராணி, எஸ்.லட்சுமி உள்ளிட்டோர் மாற்றப்பட்டு உள்ளனர்.

அதேபோல், பா.ம.க., தலைவர் அன்புமணிக்கு எதிராக, நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்து வரும், மூத்த சிவில் நீதிபதி எம்.தர்மபிரபு, சிறு வழக்குகள் 3வது நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

சென்னை தவிர்த்து, நாங்குநேரி, செங்கல்பட்டு, விழுப்புரம், கோவை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த சிவில் நீதிமன்றம் மற்றும் மாஜிஸ்திரேட் நீதிமன்ற மூத்த சிவில் நீதிபதிகள் என, மொத்தம் 98 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக, சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் எஸ்.அல்லி தெரிவித்து உள்ளார்.

Advertisement