காஞ்சியின் நான்கு தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு... 85 சதவீதம் 14 சதவீதம் அதிகரிப்பால் வேட்பாளர்கள் கலக்கம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளிலும், 1,556 ஓட்டுச்சாவடிகளில் நேற்று நடந்த சட்டசபை தேர்தலில், மாலை 5:00 மணி நிலவரப்படி 84.92 சதவீதம் ஓட்டுபதிவாகியுள்ளது. கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில், 14 சதவீதம் அதிகரிப்பால், வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார் - தனி, காஞ்சிபுரம், உத்திரமேரூர் என, நான்கு சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், தேர்தல் அதிகாரிகள் இரு மாதங்களாக செய்து வந்தனர்.
மார்ச் 15ல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலானதை தொடர்ந்து, பறக்கும் படை, கண்காணிப்பு குழு மூலம், வாகன சோதனைகள் தீவிரமடைந்தன.

1556 ஓட்டுச்சாவடி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளிலும், 65 பேர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். அரசியல் கட்சியினர் கிராமம், நகரம் என அனைத்து இடங்களிலும், கடுமையான வெயிலிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
பிரசாரம் செய்யும் பணிகள் ஒருபுறம் இருக்க, தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுளையும் அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டனர்.
மாவட்டம் முழுதும் அமைந்துள்ள, 1,556 ஓட்டுச்சாவடிகளில், 12.07 லட்சம் வாக்காளர்கள் ஓட்டளிக்க ஏதுவாக, வீல் சேர், குடிநீர், மின் விசிறி, போலீஸ் பாதுகாப்பு என அனைத்து வசதிகளையும் தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டனர்.
மாற்றுத்திறனாளிகள், முதியோர் என, 2,000 வாக்காளர்கள் வீட்டிலிருந்தே ஓட்டளித்தனர். பதற்றமான 123 ஓட்டுச்சாவடிகளை, சி.ஆர்.பி.எப்., பாதுகாப்பு படையினர், போலீசார் கண்காணித்தனர். மாவட்டம் முழுதும், 10,610 அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.
தேர்தல் நாளான நேற்று, காலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர கோளாறு காரணமாக, மேல்பொடவூர், தைப்பாக்கம், விப்பேடு, முத்தியால்பேட்டை, வளர்புறம், ஸ்ரீபெரும்புதுார் நகராட்சிக்குட்பட்ட ஜெ.ஜெ., அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி என, பல இடங்களில், ஓட்டுப்பதிவு தாமதமாகின.
பெரும்பாலான இடங்களில் ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்தது.
வேட்பாளர்கள் தொகுதியின் பல்வேறு இடங்களுக்கு சென்று, ஓட்டுச்சாவடியில் ஆய்வு செய்தனர். தங்கள் கட்சி முகவர்களிடம் ஓட்டுப்பதிவு விபரங்களை கேட்டறிந்தனர்.
காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் காலனியில் உள்ள இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், வரிசையில் நின்று தன் ஓட்டை செலுத்தினார்.
முதியோர், இளைஞர்கள், பெண்கள், முதல் வாக்காளர்கள் என, அனைத்து தரப்பு வாக்காளர்களும் வரிசையில் நின்று ஆர்வத்துடன் ஓட்டளித்தனர். முதல் தலைமுறை வாக்காளர்கள் ஆர்வத்துடன் ஓட்டளித்தனர்.
ஸ்ரீபெரும்புதுார் சட்ட சபை தொகுதி, கூழங்கலசேரி அரசு துவக்கப்பள்ளி மற்றும் காஞ்சிபுரம் அடுத்த, கீழம்பி ஓட்டுச்சாவடியில் புதுமணத்தம்பதியினர் ஓட்டளித்தனர்.
ஓட்டுப்பதிவு விபரங்களை தேர்தல் கமிஷன் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வெளியிட்டது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தின் மொத்த ஓட்டுப்பதிவு சதவீதமாக காலை 9:00 மணிக்கு, 18.78 சதவீதமும், 11:00 மணிக்கு 39.48 சதவீதமும், 1:00 மணிக்கு 58.98 சதவீதமும், 3:00 மணிக்கு 72.51, மாலை 5:00 மணிக்கு, 84.92 சதவீதமும் பதிவிாகியிருந்தன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்ட சபை தொகுதிகளில், அதிகபட்சமாக உத்திரமேரூர் தொகுதியில், 80 சதவீதம் வரை ஓட்டுப்பதிவு பதிவாவது வழக்கம்.
ஆனால், இம்முறை ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், 80 சதவீதத்திற்கு அதிக ஓட்டுப்பதிவு கிடைத்துள்ளது, தேர்தல் அதிகாரிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறப்பு தீவிர திருத்த பணிகள் காரணமாகவே, அதிக ஓட்டுப்பதிவு கிடைத்திருப்பதாகவே, அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
2021ல் 71.1 சதவீதம் பதிவு ஓட்டுச்சாவடிக்குள் மொபைல் போன்களை வாக்காளர்கள் எடுத்து செல்ல தேர்தல் கமிஷன் தடை விதித்தது.
ஓட்டுச்சாவடி வெளியே, மொபைல் போன் வைப்பதற்கும் சிறப்பு சணல் பை ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கு வழங்கப்பட்டது. ஆனால், அந்த சணல் பையை பெரும்பாலான ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்தவே இல்லை.
ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், அவற்றை பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், வாக்காளர்கள் பலரும் மொபைல் போனுடன், ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டளித்தனர்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், ஆலந்துார் தொகுதியில், 3 லட்சத்து 89,032 வாக்காளர்களில், 61.1 சதவீதமும், ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் 3 லட்சத்து 55,198 வாக்காளர்களில், 74.3 சதவீதமும், உத்திரமேரூர் தொகுதியில், 2 லட்சத்து 60,367 வாக்காளர்களில் 80.8 சதவீதமும், காஞ்சிபுரம் தொகுதியில் 3 லட்சத்து 9,117 வாக்காளர்களில் 74.2 சதவீதமும் பதிவாகியிருந்தன.
மொத்தம் 71.1 சதவீதம் பேர் ஓட்டளித்தனர்.
கடந்த தேர்தலை ஒப்பிடு கையில் 14 சதவீதம் அதிகரிப்பால், வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
@block_B@ --------------------------------------------------------காஞ்சியில் நேற்று மாலை 5:00 மணி வரை பதிவான ஓட்டுப்பதிவு விபரம் தொகுதி மொத்த வாக்காளர்கள் ஓட்டளித்த வாக்காளர்கள் சதவீதம் ஆலந்துார் 3,01,055 2,53,603 84.24 ஸ்ரீபெரும்புதுார் 3,81,750 3,17,350 83.13 உத்திரமேரூர் 2,46,177 2,16,321 87.87 காஞ்சிபுரம் 2,78,775 2,36,140 84.71 மொத்தம் 12,07,757 10,23,414 84.92block_B
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேர்தல் பணியில் ஈடுபட்ட எஸ்.எஸ்.ஐ., மார-டைப்பில் பலி
-
கோவில் 'பதி'க்கு செல்ல முடியாதபடி வேலி நெடுஞ்சாலையில் ஒரு சமுதாயத்தினர் மறியல்
-
கேமராவில் உதயநிதி என ஆங்கிலத்தில் ஒலித்ததால் 30 நிமிடம் ஓட்டுப்பதிவு பாதிப்பு
-
மணக்கோலத்தில் ஓட்டுச்சாவடி வந்து ஜனநாயக கடமையாற்றிய மணப்பெண்
-
6 மணிக்கு மேல் ஓட்டு போட அனுமதி கேட்டு வாக்காளர்கள் வாக்குவாதம்
-
மூதாட்டிக்கு தவறான சின்னம் கூறியதால் வாக்குவாதம்
Advertisement
Advertisement