6 மணிக்கு மேல் ஓட்டு போட அனுமதி கேட்டு வாக்காளர்கள் வாக்குவாதம்
ராசிபுரம்: ராசிபுரம் அருகே, ஓட்டுச்சாவடியில் மாலை 6:00 மணிக்கு மேல் ஓட்டு போட அனுமதி கோரி வாக்காளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நேற்று நடந்தது. தேர்தல் ஆணைய உத்தரவின்படி நேற்று மாலை, 6:00 மணியுடன் ஓட்டுப்பதிவு நேரம் நிறைவடைந்தது. இந்நிலையில், ராசிபுரம் அடுத்த கட்டனாச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஓட்டுச்சாவடி எண், 84 அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று மாலை, 6:00 மணியானதும் ஓட்டுப்பதிவு நேரம் முடிந்ததாகக் கூறி, அங்கிருந்த அதிகாரிகள் ஓட்டுச்சாவடியின் நுழைவு வாயில் கதவை மூடினர். அப்போது அங்கு வந்த அண்ணா நகரை சேர்ந்த ஒரு பெண் உள்ளிட்ட, 6 வாக்காளர்கள் தங்களை ஓட்டுப் போட அனுமதிக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டனர்.
நேரம் முடிந்துவிட்டதால், அனுமதி கிடையாது என அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த வாக்காளர்கள் ஓட்டுச்சாவடி நுழைவு வாயிலை முற்றுகையிட்டு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஓட்டுப்பதிவு அலுவலர்கள், போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ராசிபுரம் டி.எஸ்.பி., விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 'விதிமுறைகளின்படி நேரம் முடிந்துவிட்டதால், இனி ஓட்டுப் போட அனுமதிக்க முடியாது' என்றனர். ஆனால் அதனை ஏற்க மறுத்த வாக்காளர்கள், தொடர்ந்து மறியலில் ஈடுபட்டதால், நுழைவு வாயில் கதவை மறித்து நின்றவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் கட்டனாச்சம்பட்டி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.