திருவள்ளூரில் 10 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு... அபாரம் 11 சதவீதம் அதிகரிப்பால் வேட்பாளர்கள் கலக்கம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளிலும், நேற்று காலை முதல் வாக்காளர்கள் ஆர்வமாக ஓட்டளித்தனர். கடந்த தேர்தல்களில் இல்லாத வகையில், இத்தேர்தலில் நேற்று மாலை 6.00 மணி நிலவரப்படி 80.70 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இதனால், பிரதான கட்சி வேட்பாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளில், ஆண்கள் - 15,69,312, பெண்கள் - 16,40,283, மூன்றாம் பாலினம் - 618 என, மொத்தம் 32,10,213 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த தேர்தலில், கும்மிடிப்பூண்டி - 15, பொன்னேரி - 13, திருத்தணி - 13, திருவள்ளூர் - 14, பூந்தமல்லி - 11, ஆவடி - 20, மதுரவாயல் - 21, அம்பத்துார் - 23, மாதவரம் - 15 மற்றும் திருவொற்றியூர் - 15 என, 160 பேர் போட்டியிடுகின்றனர். 10 சட்டசபை தொகுதிகளிலும், 4,016 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

Tamil News
பாதுகாப்பு பணியில், துணை ராணுவத்தினர், காவலர்கள் என, 5,000 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். பதற்றமான ஓட்டுச்சாவடிகளில், துணை ராணுவத்தினருடன், நுண் பார்வையாளர்களும் பணியில் ஈடுபட்டனர்.

நேற்று காலை 7:00 மணிக்கு துவங்கி, மாலை 6:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடந்தது. காலை முதலே வாக்காளர்கள் ஓட்டுச்சாவடிகளில், நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமாக ஓட்டளித்தனர். மாவட்டத்தில் 17 இடங்களில், ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் சிறிய கோளாறு ஏற்பட்டது. அவற்றை, தேர்தல் அலுவலர்கள் சரிசெய்த பின், ஓட்டுப்பதிவு துவங்கியது.

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப், லட்சுமி மேல்நிலைப் பள்ளியில் தன் ஓட்டை செலுத்தினார். எப்போதும் இல்லாத வகையில், இத்தேர்தலில் ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள் காலை முதலே ஓட்டளித்தனர். நேற்று பகலில் அனல் காற்று வீசக்கூடும் என, வானிலை மையம் அறிவித்ததால், பகல் 1:00 மணிக்குள், 55 சதவீதம் பேர் ஓட்டளித்தனர்.

மாலை 3:00 மணிக்கு மேல், வெயிலின் உக்கிரம் குறைந்ததும், மீண்டும் வாக்காளர்கள் ஓட்டுச்சாவடிக்கு வந்து, தங்களது ஓட்டுகளை செலுத்தினர். நேற்று மாலை 6:00 மணி நிலவரப்படி, திருவள்ளூர் மாவட்டத்தில், 80.70 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின.

ஓட்டுப்பதிவு நிறைவடைந்தும், கூட்டம் அதிகமுள்ள ஓட்டுச்சாவடிகளில், வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கி, தொடர்ந்து ஓட்டுப் போட அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த காலங்களில் நடைபெற்ற சட்டசபை தொகுதிகளில் பெற்ற ஓட்டு சதவீதத்தை விட, இத்தேர்தலில் அதிக ஓட்டுகள் பதிவாகின. ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரித்ததற்கு, எஸ்.ஐ.ஆர்., மற்றும் மாவட்டத்தின் நிர்வாகத்தின் விழிப் புணர்பு பெரும் பங்காற்றியுள்ளதாக, மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதாப் தெரிவித்தார்.

ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரித்ததால், தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட பிரதான கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஓட்டுச்சாவடிகளில் பதிவான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், நேற்று மாலை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில், 'சீல்' வைக்கப்பட்டு, இரவோடு இரவாக ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி மற்றும் திருவள்ளூர் தொகுதிகளில் பதிவாகும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், செவ்வாப்பேட்டை அரசு பாலிடெக்னிக் கல்லுாரியிலும், ஆவடி, மதுரவாயல், திருவொற்றியூர் ஆகிய தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், பெருமாள்பட்டு ஸ்ரீராம் வித்யா மெட்ரிக் பள்ளி வளாகத்திலும் வைக்கப்பட்டன.

மேலும், அம்பத்துார், மாதவரம் மற்றும் பூந்தமல்லி ஆகிய தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், பெருமாள்பட்டு ஸ்ரீராம் பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்திலும், நேற்று இரவே கொண்டு செல்லப்பட்டன.

அங்கு அமைக்கப்பட்டுள்ள, 'ஸ்ட்ராங் ரூமில்' ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்படும்.

ஓட்டு எண்ணும் மையங்களைச் சுற்றிலும், 3 கி.மீ.,க்கு, 'ட்ரோன்' பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தினமும், சுழற்சி முறையில், ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மே 4ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட உள்ளன.

தி.மு.க., - த.வெ.க., மோதல்

பிளேஸ்பாளையத்தில் சலசலப்பு

திருவள்ளூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பூண்டி ஒன்றியம், பிளேஸ்பாளையம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில், நேற்று காலை ஓட்டுப்பதிவு துவங்கியது. பாதுகாப்பு பணியில் ஒரு காவலர் மட்டுமே இருந்ததால், ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலர், ஓட்டுச்சாவடிக்குள் சென்று, வாக்காளர்களிடம் ஓட்டு கேட்டனர். இதை, த.வெ.க., தொண்டர்கள் தட்டிக் கேட்டதால், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்ததும், பென்னலுார்பேட்டை போலீசார் வந்து, அவர்களை அங்கிருந்து அகற்றினர். l அல்லிகுழி பகுதியில், போக்குவரத்து வசதி இல்லாததால், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், 'ஷேர் ஆட்டோ'வில் வந்து ஓட்டு செலுத்தினர். l மணவாளநகரைச் சேர்ந்த புதுமண தம்பதி ரூபேஷ்- - வாணி மணக்கோலத்தில், பட்டரை அரசு பள்ளியில் தங்கள் ஓட்டை செலுத்தினர். l பசுமை ஓட்டுச்சாவடிகளில் ஓட்டு போட்ட வாக்காளர்களுக்கு, விதை பேனா பரிசாக வழங்கப்பட்டன.

Advertisement