போதிய பஸ்கள் இல்லை; ஓட்டு போட முடியாமல் மக்கள் தவிப்பு

17

சென்னை: ஒரே நேரத்தில் போக்குவரத்து ஊழியர்கள் அதிகம் பேர் நேற்று விடுப்பில் சென்றதால், போதிய பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால், தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று ஓட்டு போட முடியாமல் பொது மக்கள் திண்டாடினர்.

ஓட்டுப் போடுவதற்கு பொது மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து தினமும் இயக்கக் கூடிய 2,092 பஸ்களுடன், 5,574 சிறப்புப் பஸ்கள் என 21, 22, 23ம் தேதிகளில், மொத்தம் 10,663 பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு, நேற்று முன்தினம் இரவு, 8:00 மணி முதல் நேற்று அதிகாலை 6:00 மணி வரை, 5,00,000க்கும் மேற்பட்டோர் வந்தனர். ஆனால், பயணியர் வருகைக்கு ஏற்ப, சிறப்பு பஸ்கள் போதுமானதாக இல்லை.

இந்நிலையில், ஜனநாயக கடமையாற்ற எப்படியாவது சொந்த ஊருக்கு சென்று விட வேண்டும் என, பயணியர் விடாமுயற்சி காட்டியதால், கிளாம்பாக்கம் பஸ் முனையம் விடிய விடிய அல்லோகலப்பட்டது.

இரு சக்கர வாகனங்களில், மனைவி, குழந்தைகளோடு ஏராளமானோர் வருகை தந்த நிலையில், 'டூ வீலர் பார்க்கிங்' பகுதி நிரம்பி வழிந்தது.

இதனால், சில ஆயிரம் பேர் தங்கள் டூ வீலர்களை நிறுத்த முடியாத சூழல் நிலவியது. விடிய விடிய காத்திருந்தும் பஸ்கள் கிடைக்காமல், ஆயிரக்கணக்கானோர் ஓட்டளிக்க முடியாத சோகத்துடன், மீண்டும் வீடு திரும்பினர்.

தேர்தல் என்பது ஜனநாயக திருவிழா என்பதால், அனைத்து மக்களும் சொந்த ஊர் சென்று, ஓட்டளித்து திரும்புவர். இதை அதிகாரிகள் சரியாக கணித்து, அதற்கேற்ப திட்டமிட்டு, கூடுதல் எண்ணிக்கையில் சிறப்பு பஸ்களை இயக்கியிருக்க வேண்டும்.

ஆனால், போதிய ஏற்பாடுகள் செய்யவில்லை என, பொது மக்கள் புகார் தெரிவித்தனர். வேறு வழி இல்லாமல், சிலர் ஆயிரக்கணக்கில் பணத்தை செலவழித்து, ஆம்னி பஸ்களில் பயணம் செய்தனர்.

அரசு போக்குவரத்து கழகங்களில் மொத்தம் 1.19 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். அத்தியாவசிய பணியாக கருத்தில் கொண்டு, போக்குவரத்து ஊழியர்களுக்கு முதல் முறையாக, முன் கூட்டியே ஓட்டளிக்கும் விதமாக தபால் ஓட்டு வசதி அளிக்கப்பட்டது. ஆனால், இந்த வசதி பெற விரும்பிய ஊழியர்கள், கடந்த 17 முதல் 20ம் தேதிக்குள், அவர்களின் தொகுதிகளுக்குச் சென்று ஓட்டளிக்கலாம் என, அறிவிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடிகளுக்கு நேரில் சென்று தான், ஓட்டுப் போட வேண்டும் என்பதால், பெரும்பாலான ஊழியர்கள் ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும், ஆயிரக்கணக்கானோர் தங்கள் ஊர்களுக்குச் சென்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பணிக்கு திரும்பவில்லை என கூறப்படுகிறது.

மேலும், நேற்று முன்தினம் மாலையில் பணியில் இருக்க வேண்டிய ஓட்டுனர்கள், நடத்துனர்களில், 30 முதல் 40 சதவீதம் பேர் விடுப்பு எடுத்து கொண்டதாக, பணியாற்றிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், அரசு பஸ்கள் முழு அளவில் ஓடாமல் இருந்தன. வெளியூர் செல்ல திட்டமிட்ட பொது மக்களில் சிலர் கிளாம்பாக்கம், கோயம்பேடு பஸ் நிலையங்களில் காத்திருந்து, மீண்டும் வீட்டுக்கே திரும்பியுள்ளனர்.

இதேபோல், சென்னையில் காலை 10:00 மணிக்கு பின், மாநகர பஸ்களின் இயக்கம் குறைக்கப்பட்டதால், பொது மக்கள் அவதி அடைந்தனர்.

இது குறித்து, பஸ்களுக்காக காத்திருந்த பொது மக்கள் கூறியதாவது: தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகைகளுக்கு, அந்த மதத்தை சார்ந்தவர்கள் மட்டுமே சொந்த ஊர் செல்வர். ஆனால், தேர்தல் என்பது ஜனநாயக திருவிழா என்பதால், அனைத்து மதத்தினரும் சொந்த ஊர் சென்று ஓட்டளித்து திரும்புவர்.

இதை அதிகாரிகள் சரியாக கணித்து, அதற்கேற்ப திட்டமிட்டு, கூடுதல் எண்ணிக்கையில் சிறப்பு பஸ்களை இயக்கியிருக்க வேண்டும். இது தவிர, சென்னையின் பல இடங்களில் இருந்து, கிளாம்பாக்கம் முனையத்திற்கு போதிய அளவில், மாநகர பஸ்கள் இயக்கவில்லை.

இதனால், கூடுதல் கட்டணம் செலுத்தி, ஆட்டோ, கால்டாக்சி பிடித்து, கிளாம்பாக்கம் வர வேண்டிய நிலை ஏற்பட்டது. குடும்பத்தோடு, விடிய விடிய காத்திருந்தும், பல ஆயிரம் பேருக்கு பஸ் வசதி கிடைக்கவில்லை. இதனால், சிலர் ஓட்டளிக்க சொந்த ஊர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருப்பது, ஜனநாயக படுகொலைக்கு சமமானது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

சென்னை மட்டுமல்லாமல், கடலுார், விழுப்புரம், திருப்பூர் உட்பட, மாநிலம் முழுதும் பல நகரங்களிலிருந்து, தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டிருந்த மக்களும், போதிய பஸ் வசதி இன்றி அவதிப்பட்டனர்.

@block_B@

அதிகாரிகள் சொல்வது என்ன?



அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: தேர்தலையொட்டி, சென்னையில் இருந்து வெளியூர்களுக்கும், வெளியூர்களில் இருந்து சென்னைக்கும் போதிய அளவில் பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால், நேற்று முன்தினம் மாலையில் திடீரென ஜி.எஸ்.டி., சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், வெளியூர் சென்ற பஸ்கள் சென்னை உள்ளே வருவதில், பல மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. அதேநேரத்தில், கிளாம்பாக்கத்தில் ஒரே நேரத்தில் பல ஆயிரக்கணக்கானோர் திரண்டதால், உடனடியாக பஸ் சேவை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் நேற்று அதிகாலை 2:00 மணி வரையிலும் பஸ்கள் கிடைக்காததால், விரக்தியடைந்த 500க்கும் மேற்பட்ட பயணியர், பஸ் முனையத்தின் நுழைவு வாயிலுக்கு வந்து, ஜி.எஸ்.டி., சாலையில் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஆனால், பாதுகாப்பிற்காக நின்றிருந்த போலீசார், அவர்களிடம் சாமர்த்தியமாக பேசி, போராட்டத்தை கைவிடும்படி செய்தனர். block_B

@block_Y@

தேர்தல் கமிஷனில் விஜய் கட்சி புகார்



த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர், தமிழக தலைமை தேர்தல் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர். பின், இருவரும் கூறியதாவது: இந்த தேர்தலில் ஓட்டளிப்பதற்கு தன்னெழுச்சியாக மக்கள் முன்வந்துள்ளனர்.

வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து ஓட்டளிக்க, ஏராளமானவர்கள் தமிழகம் வந்துள்ளனர். சென்னையில் இருந்து, தென் மாவட்டங்கள் உட்பட மாவட்டங்களுக்கு ஓட்டளிப்பதற்கு செல்ல போதுமான பஸ் வசதிகளை, அரசு ஏற்படுத்தி தரவில்லை. போக்குவரத்து துறை செயலர் ஜடாக் சிரு, சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் பிரபுசங்கர், அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் மோகன் ஆகியோர், இதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.

ஓட்டு சதவீதம் அதிகரித்தால், தி.மு.க., தோல்வி அடையும் என்பதால், பஸ்களை இயக்காமல், இவர்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல் பட்டுள்ளனர். எனவே, இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து, பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என, தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத்தினோம். ஆனால், ேதர்தல் கமிஷன் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.block_Y

@block_G@

நிர்வாக சீர்கேடு: சீமான் சீற்றம்



நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை, நீலங்கரையில் ஓட்டுப்பதிவு செய்த பின் அளித்த பேட்டி: மக்களுக்கு கடைசி வலிமை ஓட்டு தான். ஆனால், வேட்பாளர்கள், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாததால், 100 சதவீதம் ஓட்டுப் பதிவாகமல் உள்ளது. சொந்த ஊர்களுக்கு சென்று ஓட்டுப் போட, மக்களுக்கு போதியளவு பஸ் வசதி ஏற்படுத்தி தராதது, நிர்வாக சீர்கேடு.

அரசின் பேராசையால் கிளம்பாக்கம் பஸ் நிலையம் கட்டி, மக்களுக்கு போதியளவு வசதி ஏற்படுத்தி தரவில்லை. அது மக்களுக்கு தொந்தரவாகவும், தொல்லையாகவும் உள்ளது. தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு எதிராக மாற்றம் தேவை. அதற்காக தான் நாங்கள் உழைத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.block_G

Advertisement