தண்ணீர் தேடி திரிந்த புள்ளி மான் இறப்பு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே தண்ணீர் தேடி திரிந்த புள்ளிமான் கம்பி வேலியில் சிக்கி இறந்தது.

கோலியனுார் அடுத்த சாலைஅகரம் கிராமத்தின் ஏரிக்கரையில், மதகு அருகே தனியார் நிலத்தின் இரும்பு வேலி ஓரமாக நேற்று காலை 8:00 மணிக்கு புள்ளி மான் இறந்து கிடந்தது. இதனை பார்த்த கிராமத்தினர், விழுப்புரம் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

விழுப்புரம் வனக்காப்பாளர் பிரபு தலைமையில் வந்த வனத்துறை ஊழியர்கள் மான் உடலை மீட்டு, விழுப்புரம் மருதுார் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிரதே சோதனை செய்து, கண்டாச்சிபுரம் காப்புக்காடு பகுதியில் அடக்கம் செய்தனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், 'தற்போது கோடை வெயில் என்பதால், தண்ணீருக்காக மான்கள் வெளியே திரிகின்றன. இப்படி தண்ணீர்தேடி வந்த 2 வயதும், 60 கிலோ எடையும் கொண்ட புள்ளி மான் நேற்று அதிகாலை ஏரி பகுதிக்கு வந்தபோது, அருகே விவசாய நிலத்திற்கு அமைத்திருந்த கம்பி வேலியில் கால் சிக்கிக்கொண்டு காயமடைந்து மயங்கி விழுந்து இறந்துள்ளது' என்றனர்.

Advertisement