‛கழுதை தேய்ந்து கட்டெறும்பு' ஆன ஆம் ஆத்மி கட்சியின் கதை

30

நமது சிறப்பு நிருபர்




ஊழலுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவாலால் துவக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி, அதில் இருந்த நிர்வாகிகள் பலர் தொடர்ந்து விலகுவதால் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக மாறி உள்ளது.


ஊழலுக்கு எதிராக சமூக போராட்ட ஆர்வலர் அன்னா ஹசாரே நடத்திய போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர் அரவிந்த் கெஜ்ரிவால். 2012ல் ஆம் ஆத்மி என்ற கட்சியை துவக்கினார். 2013ல் டில்லி சட்டசபை தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்டு 28 இடங்களைப் பிடித்து காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார்.


தொடர்ந்து 2015ல் 70-க்கு 67 இடங்களையும், 2020ல் 62 இடங்களையும் இந்தக்கட்சி வென்று அமோக வெற்றி பெற்றது. பின்னர் பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனால் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்து மாநிலக் கட்சி அந்தஸ்தைப் பெற்றது. ஆனால் தற்போது அந்த கட்சி உடைய துவங்கி உள்ளது.
சில ஆண்டுகளில் இந்த கட்சியை சேர்ந்த சில முக்கிய தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர். தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டு, டில்லியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் இக்கட்சி பல சவால்களை எதிர் கொண்டு வருகிறது. 2015 முதலே அக்கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள் விலகினர். அது நேற்று வரை தொடர்ந்தது. நேற்று ஒரே நாளில் 7 எம்பிக்கள் விலகினர்.

இதுவரை அக்கட்சியலிருந்து விலகிய முக்கிய தலைவர்கள், எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏ.,க்கள்:

எம்பிக்கள்



ஆம் ஆத்மி கட்சிக்கு 10 மாநிலங்களவை எம்பிக்கள் உள்ளனர். ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தனது கொள்கையில் இருந்து விலகிவிட்டதாக கூறி அக்கட்சியை சேர்ந்த 7 எம்பிக்களான, ‛‛ராகவ் சத்தா, சந்தீப் பதக், அசோக் மிட்டல், ஹர்பஜன் சிங், ராஜீந்தர் குப்தா, விக்ரம் சாஹ்னி, ஸ்வாதி மாலிவால் ஆகியோர் விலகி பா.ஜ.,வில் இணைந்தனர்.



மொத்தம் உள்ள 10 மாநிலங்களவை உறுப்பினர்களில் 7 பேர் (மூன்றில் இரண்டு பங்கு) விலகியுள்ளதால், அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயாது என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இவர்கள்:



* ராகவ் சத்தா (Raghav Chadha): ஆம் ஆத்மி கட்சியின் தொடக்க காலத்திலிருந்தே இருந்தவர் மற்றும் கட்சியின் முக்கிய முகம்.

* சந்தீப் பதக் (Sandeep Pathak): கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் மற்றும் பஞ்சாப் தேர்தல் வெற்றியில் முக்கிய பங்காற்றியவர்.

* சுவாதி மாலிவால் (Swati Maliwal): டில்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவர்.

* ஹர்பஜன் சிங் (Harbhajan Singh): முன்னாள் கிரிக்கெட் வீரர்.

* அசோக் மிட்டல் (Ashok Mittal): லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகத்தின் நிறுவனர்.

* ராஜேந்திர குப்தா (Rajinder Gupta): தொழிலதிபர்.

* விக்ரம் சாஹ்னி (Vikram Sahney): தொழிலதிபர்.

கடந்த காலங்களில் விலகிய முக்கியமானவர்கள்:

ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்ட காலத்திலிருந்து பல்வேறு காரணங்களால் பல முக்கிய தலைவர்கள் வெளியேறியுள்ளனர்:

தலைவர்/காரணம் / தற்போதைய நிலை

யோகேந்திர யாதவ் & பிரசாந்த் பூஷன் உட்கட்சி மோதலால் 2015-ல் நீக்கப்பட்டனர் (சுயராஜ் இந்தியா கட்சி).


கிரண் பேடி கட்சி தொடங்குவதற்கு முன்பே விலகி பாஜகவில் இணைந்தார். குமார் விஸ்வாஸ் தலைமை மீதான அதிருப்தியால் கட்சியிலிருந்து விலகி அரசியலில் இருந்து ஒதுங்கினார். சாஜியா இல்மி 2015-ல் விலகி பாஜகவில் இணைந்தார்.
கபில் மிஸ்ரா 2017-ல் ஊழல் புகார்களை முன்வைத்து வெளியேறி பாஜகவில் இணைந்தார். ஆஷிஷ் கேதான் 2018-ல் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகினார். கைலாஷ் கெலாட் டில்லி அமைச்சர் பதவியிலிருந்து சமீபத்தில் விலகியவர்.

விலகலுக்கான பொதுவான காரணங்கள்:

* கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட அதிகார மோதல்.

* மதுபானக் கொள்கை தொடர்பான ஊழல் வழக்குகள் மற்றும் கைது நடவடிக்கைகள்.

* கட்சி அதன் ஆரம்பகால லட்சியங்களில் இருந்து விலகிச் செல்வதாகக் கூறி முன்வைக்கப்படும் விமர்சனங்கள்.

* இந்த மாற்றங்கள் வரும் பஞ்சாப் மற்றும் டில்லி தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement