பிரதான சாலையில் வழிந்தோடும் குடிநீர் :கோடை காலத்தில் வீணாகும் அவலம்
பெரும்பாக்கம்: குழாய் உடைந்து பிரதான சாலையில் வழிந்தோடும் குடிநீரால், கோடை காலத்தில் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.
சென்னை, பெரும்பாக்கம் - -நுாக்கம்பாளையம் சாலை போக்குவரத்து அதிகமுள்ள சாலையாகும். ஐ.டி., நிறுவனங்களில் பணிபுரியும் ஆயிரக்கணக்கானோர் இச்சாலையை பயன்படுத்துகின்றனர்.
கடந்த 15 நாட்களுக்கு முன் மின் வாரியம் சார்பில் புதை மின்வட சீரமைப்பு பணியின்போது, குடிநீர் குழாய் சோதமடைந்தது.
அதை சரி செய்யாததால், தண்ணீர் வெளியேறி சாலையில் வழிந்தோடி தேங்கி வருகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சிக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால், வாகனங்களில் சகதி படிவதோடு, போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது. தினமும் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.