ஓட்டுக்கு வழங்கப்பட்ட பணம்: அ.தி.மு.க., நிர்வாகிகள் 'ஸ்வாகா'

வானுார்: வானுார் சட்டசபை தொகுதியில் ஓட்டுக்கு வழங்கப்பட்ட பணத்தை அ.தி.மு.க., கிளை நிர்வாகிகள் சுருட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வானுார் சட்டசபை தொகுதியில் கடந்த 5 முறை தொடர்ச்சியாக அ.தி.மு.க., வெற்றி பெற்று கோட்டையை தக்க வைத்துள்ளது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலிலும் ஆறாவது முறையாக வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைக்க வேண்டும் என அ.தி.மு.க., தலைமை விரும்பியது.

இதற்காக அ.தி.மு.க.,வில் புதிய வேட்பாளராக மாவட்ட கலைப்பிரிவைச் சேர்ந்த பாடகர் முருகன் களமிறக்கப்பட்டார்.

அ.தி.மு.க., வசம் உள்ள இந்த தொகுதியை கைப்பற்ற இளம் வேட்பாளராக கவுதம் களமிறக்கப்பட்டதைத் தொடர்ந்து, தி.மு.க., வினர் தீவிரமாக தேர்தல் பணியாற்றினர்.

இதனால் அ.தி.மு.க., - தி.மு.க.,வினரிடையே கடும் போட்டி நிலவியது. விழுப்புரத்தில் போட்டியிட்ட லட்சுமணன் எம்.எல்.ஏ., வானுார் தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வேட்பாளர் கவுதமிற்கு ஆதரவாக கிராமம் தோறும் பிரசாரம் செய்தார்.

ஒவ்வொரு முறையும் தி.மு.க.,வினரை விட, அ.தி.மு.க.,வினர் ஓட்டுக்கு கூடுதல் பணம் செலவழித்து வந்ததால் வெற்றியை தக்க வைத்து வந்தனர். கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் 21 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் அ.தி.மு.க., வெற்றி பெற்றது.

இந்த முறை அ.தி.மு.க.,வினர் ஒரு பக்கம் பிரசாரம் மேற்கொண்டாலும், தி.மு.க., சார்பில் பணத்தை தண்ணீர் போல் செலவழித்து ஓட்டுகளைக் கவரும் வேலையில் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு கிளையிலும் முன்கூட்டியே டோக்கன் வழங்கப்பட்டு, மாவட்டத்தில் உள்ள தி.மு.க., நிர்வாகிகள் அந்த டோக்கன்களுகு்கு பணத்தை பட்டுவாடா செய்தனர். யாரும் எதிர்பார்க்காத நிலையில், தி.மு.க.,வினர் ஒரு ஓட்டுக்கு 1,000 ரூபாய் வழங்கியதால், அ.தி.மு.க.,வினர் அதிர்ச்சியடைந்தனர்.

இருப்பினும் எப்போதும் போன்று, அ.தி.மு.க., சார்பில் ஓட்டுக்கு 500 ரூபாய் வழங்கினர். இந்த பணம் முழுதும் ஒவ்வொரு கிளை நிர்வாகிகளை சொந்தங்களை நம்பியே வழங்கப்பட்டது.

ஆனால் ஒரு சில கிளைகளில் அ.தி.மு.க.,வினர் பணத்தை வாக்காளர்களுக்கு முறையாக பட்டுவாடா செய்யவில்லை. இதனால், தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்று 6வது முறை வெற்றியை தக்க வைத்து சாதனை படைக்க வேண்டும் என தீவிரமாக களப்பணியாற்றிய ஒரு சில நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வெற்றி வாய்ப்பு பறிபோய்விடுமோ என புலம்பி வருகின்றனர்.

Advertisement