வடமாநில தொழிலாளி நீர்வள்ளூரில் கொலை
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த நீர்வள்ளூரில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி, நேற்று வெட்டி கொலை செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் அடுத்த நீர்வள்ளூரில், அருகில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கான மேன்ஷன் ஒன்று செயல்படுகிறது. இங்கு, வட மாநில தொழிலாளர்கள் பலரும் தங்கி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று, அதிகாலை 2:00 மணியளவில், தொழிலாளர்கள் தங்கியிருந்த அறை ஒன்றில் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அப்போது, அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்ததில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராம்பீம், 43, என்பவர், கத்தியால் வெட்டப்பட்டு இறந்து கிடந்தார்.
கொலை செய்த நபர் அங்கிருந்து தப்பியோடியது தெரியவந்தது. இதையடுத்து, பொன்னேரிக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
போலீசார் நேரில் சென்று விசாரணை செய்ததில், மேன்ஷன் அறைகளில் தங்கியிருந்த சிலரால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, சந்தேகிக்கின்றனர்.
இறந்தவர், காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார். கொலை நடந்த பின், சிலர் அறைகளில் இருந்து மாயமாகி உள்ளனர். மாயமாகி உள்ள நபர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து பொன்னேரிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.