தமிழ் அன்பர்களாக குழந்தைகளை மாற்றுங்கள்: ப.சிதம்பரம் பேச்சு

மதுரை:‛தமிழ் அன்பர்களாக குழந்தைகளை மாற்றுங்கள். அவர்கள் தமிழறிஞர்களாக வருவர்,'' என மதுரையில் தமிழ் வளர்ச்சிக் கழகம் சார்பில் நடந்த தமிழியல் கலைக்களஞ்சியம் வெளியீட்டு விழாவில் அதன் அறங்காவலர் குழு தலைவர் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பேசினார்.

விழாவில் தமிழ் வளர்ச்சிக் கழக தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார். புத்தகத்தை தமிழ்ப் பல்கலை முன்னாள் துணைவேந்தர் திருமலை வெளியிட, மதுரை எம்.பி.,- வெங்கடேசன் பெற்றுக்கொண்டார்.

சிதம்பரம் பேசியதாவது: நான் தமிழ் அன்பன்தான். தமிழ் வளர்ச்சிக் கழகம் 1947 ல் அவினாசிலிங்கம் செட்டியார் முயற்சியில் துவங்கப்பட்டது. பொருள் ஆதாரம் இல்லாமல் எந்த செயலையும் செய்ய முடியாது. தமிழ் வளர்ச்சிக் கழகத்திற்கு தமிழக அரசு ரூ.2 கோடி வைப்பு நிதி, செலவிற்கு ரூ.15 லட்சம் தந்தது. நாங்கள் ரூ.70 லட்சம் திரட்டியிருக்கிறோம்.தமிழியல் கலைக்களஞ்சியம் ஒரு தொகுப்புத்தான். அதில் எல்லா பொருளும் இருக்கும். இது பெரிய பொக்கிஷம்.

புது கலைக்களஞ்சியம் அல்லது திருந்திய கலைக்களஞ்சியத்தை தயாரிப்பதற்கு எங்களுக்கு சக்தி இல்லை. பெரும் தொகை தேவைப்படும். அரசே கலைக்களஞ்சிய வரி போட்டு அனைவரிடமும் தலா ரூ.1 வசூலிக்கலாம். அரசு, புரவலர்கள் உதவும் மனநிலையில் உள்ளனர். வீடுகளில் தமிழ் ஆர்வத்தை உருவாக்குங்கள். தமிழ் அன்பர்களாக குழந்தைகளை மாற்றுங்கள். அவர்களில் பலர் தமிழறிஞர்களாக வருவர். இவ்வாறு பேசினார். பொருளாளர் சரவணன் நன்றி கூறினார்.

Advertisement