பட்டறை உரிமையாளரை தாக்கி 1.5 கிலோ தங்க நகை கொள்ளை

திருச்சி: திருச்சியில், நகை பட்டறை உரிமையாளரை தாக்கி, 1.5 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை, போலீசார் தேடுகின்றனர்.

திருச்சியில் வசிக்கும், மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த உதய் என்பவர், பழைய தங்க நகைகளை உருக்கி, அதை மீண்டும் ஆபரணங்களாக செய்யும் பட்டறை நடத்துகிறார்.

நேற்று பகல் நேரத்தில், வீட்டில் தனியாக இருந்தார். அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர், உதயை தாக்கி, கை, கால்களை கட்டி, அவரது வாய்க்குள் துணியை வைத்து, கழிப்பறைக்குள் தள்ளி பூட்டினர். அதன்பின் மர்ம நபர்கள், பீரோவை உடைத்து, அங்கிருந்த ஒன்றரை கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பினர்.

பட்டறை வேலைக்கு வந்த சிறுவன், கதவை திறந்து, உதயை மீட்டார். புகாரில், மலைக்கோட்டை போலீசார், வழக்குப்பதிந்து, அப்பகுதி 'சிசிடிவி' கேமரா காட்சிகளின் உதவியுடன், மர்ம நபர்களை தேடுகின்றனர்.

பட்டப்பகலில், ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில், வீடு புகுந்து, நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement