திருத்தணி உபகோவிலில் பராமரிப்பு கேள்விக்குறி

ஆர்.கே.பேட்டை: திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான சந்தான வேணுகோபால சுவாமி கோவிலில், பராமரிப்பு பணி கேள்விக்குறியாகி உள்ளதால், பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஆர்.கே.பேட்டை ஒன்றியம் எஸ்.வி.ஜி.புரம் கிராமத்தில், சந்தான வேணுகோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், திருத்தணி முருகன் கோவில் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.

திருத்தணி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், தரிசனத்தை முடித்துவிட்டு, ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நரசிம்ம சுவாமியை தரிசனம் செய்ய செல்வர்.

இந்த வழியில் தான், சந்தான வேணுகோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. இதனால், தினமும் ஏராளமான பக்தர்கள் இக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

இந்நிலையில், இக்கோவிலின் வெளி பிரகார சுற்றுச்சுவரை ஒட்டி கட்டப்பட்டுள்ள கழிப்பறை, முற்றுலும் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது. இந்த கழிப்பறைக்கு தண்ணீர் இணைப்பு வழங்கும் மின் மோட்டாரும் பழுதடைந்துள்ளது.

இக்கோவிலில், விரைவில் பிரம்மோத்சவம் நடைபெற உள்ள நிலையில், கோவில் வெளி பிரகாரத்தை ஒட்டி செடி, கொடிகள் அகற்றப்படாமல் உள்ளன. சுற்றுச்சுவரும் வர்ணம் பூசாமல் பொலிவிழந்து உள்ளது.

எனவே, தி ருத்தணி முருகன் கோவிலின் உபகோவில்களையும் பராமரிக்க, அறநிலைய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement