கழிவுகளால் சீரழியும் தேர்வழி கிராம ஏரிகள் சீரமைத்து பாதுகாக்க மக்கள் கோரிக்கை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி ஊராட்சிக்கு உட்பட்ட பிரித்வி நகர் பின்புறம், 7.50 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. ஒன்றிய நிர்வாகத்தின் பராமரிப்பில் உள்ள இந்த ஏரிக்குள், பிரித்வி நகர், நேதாஜி நகர் பகுதிகளின் கழிவுகள் குவிக்கப்படுகின்றன. மேலும், இந்த ஏரியில் கழிவுநீர் கலந்து வருகிறது.

அதேபோல், தேர்வழி ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில், கோட்டக்கரை பின்புறம், 5.67 ஏக்கர் பரப்பளவு உள்ள தாமரை ஏரி உள்ளது. ஒன்றிய நிர்வாகத்தின் பராமரிப்பில் உள்ள இந்த ஏரிக்குள், கோட்டக்கரை பகுதியின் கழிவுநீர் திறந்து விடப்படுகிறது.

இதனால், தாமரை ஏரி முழுதும் கழிவுநீர் சூழ்ந்து, ஆகாய தாமரை படர்ந்துள்ளது. கும்மிடிப்பூண்டி நகரை ஒட்டியுள்ள இரு ஏரிகளும் மாசடைந்துள்ள நிலையில், நகர் மற்றும் தேர்வழி கிராமத்தின் நிலத்தடி நீரின் தன்மை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தேர்வழி கிராமத்தின் நிலத்தடி நீரை பாதுகாக்க, இரு ஏரிகளையும் பாதுகாக்க வேண்டும் என, பலமுறை கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகத்திடம் கிராம மக்கள் முறையிட்டனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காததால், கிராம மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

எனவே, உடனே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, இரு ஏரிகளையும் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement