மே 1 முதல் மதுபானங்களின் விலை 20 சதவீதம்... உயர்கிறது! கலால் வரியில் திருத்தம் செய்ய மாநில அரசு முடிவு சித்து அரசு பதவியேற்ற பின் 5வது முறையாக அதிகரிப்பு
பெங்களூரு:கலால் வரியில் திருத்தம் செய்ய மாநில அரசு முடிவு செய்து உள்ளதால், மே, 1ம் தேதி முதல் மதுபானங்களின் விலை, 20 சதவீதம் வரை உயர உள்ளது.
முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவிக்கு வந்த பின், தற்போது ஐந்தாவது முறையாக மதுபானங்களின் விலை உயர்த்தப்பட உள்ளது. இது, மதுப்பிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. கிரஹலட்சுமி, சக்தி திட்டம் உள்ளிட்ட ஐந்து வாக்குறுதி திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டங்களை செயல்படுத்த அதிகளவு நிதி தேவைப்படுகிறது. இதனால், பஸ், பால் உள்ளிட்டவற்றின் விலையை அடிக்கடி உயர்த்தப்படுகிறது. இதிலிருந்து கிடைக்கும் வருவாய், வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்த பயன்படுத்தப்படுகிறது.
அந்த வகையில், அரசுக்கு அதிக வருவாய் தரும் மதுபானங்கள் மீதான விலையையும் அடிக்கடி மாநில அரசு உயர்த்துகிறது. 2023ல் ஆட்சியில் அமர்ந்த காங்கிரஸ், இதுவரை நான்கு முறை மதுபானங்களின் விலையை உயர்த்தி உள்ளது.
தொடர்ச்சியாக மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகிறது. இதனால், மதுப்பிரியர்கள் மாநில அரசின் மீது கடும் கோபத்தில் இருக்கின்றனர்.
சூசகம் இந்நிலையில், மதுபானங்களின் விலையை தொடர்ந்து ஐந்தாவது முறையாக உயர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதை, 2026 - 2027ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போதே, முதல்வர் சித்தராமையா சூசகமாக அறிவித்தார்.
அதாவது, நாட்டிலே முதல் முறையாக ஆல்கஹாலின் அளவை பொறுத்து, மதுபானங்கள் மீது வரி விதிக்கப்படும் என்று கூறப்பட்டது.
இதன்படி, கலால் வரியில் திருத்தம் செய்ய சமீபத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக கடந்த, 18ம் தேதி மாநில அரசு அறிக்கை வெளியிட்டது.
அதில், கலால் வரியில் திருத்தம் செய்ய முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும், வரி திருத்தம் மே, 1ம் தேதி முதல் மாநிலம் முழுதும் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால், மதுபானங்கள் விலை, 20 சதவீதம் வரை உயர்வதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. குறைந்த விலைக்கு விற்பனையாகும் மதுபானங்களிலே பெரும்பாலும் அதிகளவு ஆல்கஹால் இடம் பெற்றிருக்கும். அதனால், குறைந்த விலைக்கு விற்பனையாகும் மதுபானங்களின் விலையே அதிகமாக உயரும்.
பாகுபாடு அதேபோல, ஆல்கஹால் குறைவாக இடம் பெற்றிருக்கும் மதுபானங்களின் விலை குறைவாகவே உயரும். ஆல்கஹால் குறைவாக இடம் பெற்றிருக்கும் மதுபானம் பெரும்பாலும் அதிக விலைக்கு விற்கப்படுபவையே.
இதை வசதி படைத்தவர்களே விரும்பி குடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது, நடுத்தர மற்றும் ஏழை குடிமகன்களிடம் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.
விலையேற்றத்தின் போதும் பணக்காரர், ஏழை என பாகுபாடு காட்டப்படுவது எவ்வகையில் நியாயம் என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மே 1ம் தேதி முதல், 180 மி.லி., அளவுள்ள மதுபானங்களின் விலை, 15 முதல் 25 ரூபாய் வரையும்; 750 மி.லி., கொண்ட பாட்டிலின் விலை 50 முதல் 100 ரூபாய் வரையும் உயர்த்தப்படலாம்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட குறைந்த விலை மதுபானங்களின் விலை, 11 முதல் 16 சதவீதம் வரை அதிகரிக்கும். இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்களின் விலை 5 சதவீதம் வரை குறையலாம்.
விலை உயர்வு மதுபானக்கடை உரிமையாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ச்சியான விலை உயர்வால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
மேலும்
-
நியூசி., ஒப்பந்தம்: பின்னலாடை துறைக்கு பொற்காலம்
-
இரு வேறு இடத்தில் அலுவலகங்கள் விவசாயிகள் அலைக்கழிப்பு
-
மக்கள் அறப்போராட்டத்துக்கு வெற்றி:முதலிபாளையம் பாறைக்குழி 'மாசடைந்த பகுதி' மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் அறிவிப்பு
-
பொய்யப்பாக்கம் கிராமத்தில் 97 சதவீதம் ஓட்டுகள் பதிவு
-
பொழுதுபோக்கு பூங்காவா... பொல்லாத ஆபத்தா?
-
சென்டர் மீடியன் உடைப்புக்கு நிரந்தர தீர்வு தேவை: 1.5 மீட்டர் உயரத்திற்கு கான்கிரீட் கட்டை அமைக்கப்படுமா?