பொழுதுபோக்கு பூங்காவா... பொல்லாத ஆபத்தா?

திருப்பூர்:தியேட்டர்களை விட்டால் திருப்பூர் மக்களுக்கு இருக்கும் ஒரே ஒரு பொழுதுபோக்கு இடம் 'வெள்ளி விழா பூங்கா' மட்டும்தான். நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் இந்தப் பூங்காவிற்கு, வார இறுதி நாட்களில் குடும்பம் குடும்பமாக மக்கள் வருவது வழக்கம். இப்போது கோடை விடுமுறை என்பதால், குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு பூங்காவிற்கு வரும் பெற்றோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

குதுாகலமாக விளையாட வரும் குழந்தைகளுக்கு அங்கே காத்திருப்பது என்னவோ ஆபத்தான 'சர்ப்ரைஸ்'கள்தான். பூங்காவில் இருக்கும் ஊஞ்சல், சறுக்கு மரம் என விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் துருப்பிடித்தும், உடைந்தும் கிடக்கின்றன. எப்போது எங்கே அடிபடுமோ என்ற அச்சத்திலேயே பெற்றோர் தங்கள் குழந்தைகளைக் கவனிக்க வேண்டியுள்ளது.

விளையாட்டுத் திடல் மட்டுமன்றி, பூங்காவிற்குள் இருக்கும் மீன் காட்சியகம் பராமரிப்பு இல்லாமல் அலங்கோலமாகக் காட்சி அளிக்கிறது. தாகத்திற்குத் தண்ணீர் குடிக்கலாம் என்றால், அங்கிருக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் எப்போது இயங்கியது என்றே தெரியாத நிலையில் துருப்பிடித்து நிற்கிறது. பெயரளவில் இருக்கும் செயற்கை நீரூற்றும் ஏமாற்றத்தையே தருகிறது.

பூங்காவை ஒட்டி நடக்கும் சுரங்கப்பாலப் பணிகளுக்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலப்பரப்பால் பூங்கா சுருங்கிவிட்டது. அங்கிருந்த உபகரணங்கள் அகற்றப்பட்டது போக, எஞ்சிய இரும்புக்கழிவுகள் பூங்கா வளாகத்திலேயே குவியலாகக் கிடப்பது வருவோரை முகம் சுளிக்க வைக்கிறது.

விடுமுறை நாளில் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு சந்தோஷமாக நேரத்தைச் செலவிட வந்தால், மனவருத்தத்தோடும் அதிருப்தியோடும்தான் வீட்டுக்குத் திரும்ப வேண்டியிருக்கிறது என்பது பொதுமக்களின் குமுறலாக உள்ளது. ஸ்மார்ட் சிட்டி என்று சொல்லிக்கொள்ளும் திருப்பூர் மாநகராட்சி, பூங்காவைச் சீரமைக்க இனியாவது முன்வருமா?

Advertisement