நியூசி., ஒப்பந்தம்: பின்னலாடை துறைக்கு பொற்காலம்

திருப்பூர்:இந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இடையே கையெழுத்தாகியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், திருப்பூரின் பின்னலாடை மற்றும் தமிழகத்தின் விசைத்தறித் துறைக்கு மாபெரும் எழுச்சியையும், புதிய பொற்காலத்தையும் தொடக்கி வைக்கும் என்று தொழில்துறையினர் கூறியுள்ளனர்.

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் அறிக்கை:

இந்த ஒப்பந்தம் இந்திய ஜவுளித் துறைக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி. தற்போது இந்திய ஆடைகளுக்கு நியூசிலாந்தில் 4 முதல் 10 சதவீதம் வரை சுங்கவரி விதிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், இனி 100 சதவீத வரிச்சலுகையுடன் இந்திய ஆடைகள் அங்கு தடையின்றி நுழைய முடியும். இது சர்வதேச சந்தையில் மற்ற நாடுகளுடன் போட்டியிட நமக்கு மிகப்பெரிய பலத்தைத் தரும்.



நியூசிலாந்து ஆண்டுதோறும் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆடைகளை இறக்குமதி செய்கிறது. இந்த வரி நீக்கத்தின் மூலம், அடுத்த இரண்டு ஆண்டுகளில் நியூசிலாந்துக்கான நமது ஏற்றுமதியை மூன்று மடங்கு உயர்த்துவதை இலக்காகக் கொண்டுள்ளோம். இது இந்தியாவிற்கு 20 பில்லியன் டாலர் வரையிலான புதிய முதலீடுகளை ஈர்க்கவும் உதவும். மேலும், ஜவுளித்துறையில் பெரும்பான்மையாகப் பணியாற்றும் பெண்களுக்குப் பல ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவும் இது ஒரு பலமான அஸ்திவாரமாக அமையும்.

இவ்வாறு, சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

@block_B@ விசைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் தலைவர் சக்திவேல் அறிக்கை: நியூசிலாந்து உடனான இந்த வர்த்தக ஒப்பந்தம் விசைத்தறி மற்றும் கைத்தறித் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும். இதுவரை நம் நாட்டுப் பொருட்களுக்கு இருந்த வரிச்சுமை நீக்கப்பட்டுள்ளதால், பருத்தி ஆடைகள் மட்டுமின்றி, செயற்கை இழை ஆடைகளுக்கும் அங்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும். இது தமிழகத்தில் உள்ள விசைத்தறித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதுடன், இந்தியாவை உலகளாவிய ஆடை உற்பத்தி மையமாக மாற்ற உறுதுணையாக இருக்கும்.block_B

Advertisement