மக்கள் அறப்போராட்டத்துக்கு வெற்றி:முதலிபாளையம் பாறைக்குழி 'மாசடைந்த பகுதி' மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் அறிவிப்பு

திருப்பூர்:திருப்பூர் முதலிபாளையம் பகுதியில் கழிவுகளால் சூழப்பட்டுக் கிடந்த கைவிடப்பட்ட கல்குவாரியை, 'மாசடைந்த பகுதி' என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

குப்பைக் கிடங்கான குவாரி:

திருப்பூர் மாநகராட்சி, முதலிபாளையம் மற்றும் நல்லுார் பகுதிகளில் பல ஆண்டுகளாகப் பயன்பாடின்றி இருந்த கல்குவாரியில், டன் கணக்கில் மாநகராட்சி குப்பைகளும், சாய ஆலைக்கழிவுகளும் சட்டவிரோதமாகக் கொட்டப்பட்டு வந்தன. இதனால் நிலத்தடி நீர் கருப்பு நிறமாக மாறி விஷமானதுடன், காற்று மாசடைந்து அப்பகுதியே வசிக்கத் தகுதியற்ற இடமாக மாறியது. விவசாயமும், கால்நடை வளர்ப்பும் முற்றிலும் முடங்கியதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.



மக்களின் சட்டப் போராட்டம்:

இதை எதிர்த்து 'முதலிபாளையம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு' மற்றும் பொதுமக்கள் இணைந்து மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். மக்களின் இந்த அறப்போராட்டத்தை உன்னிப்பாகக் கவனித்த மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், தற்போது இப்பகுதியை 'சந்தேகத்திற்குரிய மாசடைந்த பகுதி' என அறிவித்துள்ளது.



மீட்கப்படும் நிலத்தடி நீர்:

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் வேலுசாமி கூறுகையில், மக்களின் தொடர் அழுத்தத்தால் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இனி அறிவியல் பூர்வமான ஆய்வுகள் மூலம் நிலத்தடி நீர் மற்றும் மண்ணின் தரம் ஆய்வு செய்யப்பட்டு, கழிவுகள் அகற்றப்படும் என நம்புகிறோம். மேலும், எங்கள் போராட்டக் குழுவிற்கு எதிராகப் போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது, என்றார்.





Advertisement