பட்டுவாடாவுல தி.மு.க.,காரங்க கட்டுனாங்க கல்லா செந்தில் பாலாஜிகிட்ட வாங்கி கட்டுனாங்க நல்லா!
கோவை: கரூர்காரர்களின் கண்ணில் மண்ணை தூவி, கோவை உடன்பிறப்புகள் பணப்பட்டுவாடாவில் கல்லா கட்டியதாக புகார் எழுந்துள்ளது.
சட்டசபை தேர்தலையொட்டி கோவையில் உள்ள 10 தொகுதிகளுக்கும் தி.மு.க. சார்பில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது. கடந்த தேர்தல்களில் கோவை தி.மு.க.வில் பணப்பட்டுவாடா சரியாக நடைபெறவில்லை என்பதால், இந்தமுறை பொறுப்பாளர் தன்னுடைய கரூர் ஆதரவாளர்கள் மூலம் உஷார் நடவடிக்கைகளை எடுத்தார். அப்படியும் உள்ளூர் உடன்பிறப்புகள் பணத்தை சுருட்டி விட்டதாக புகார் எழுந்துள்ளது.
கோவை தி.மு.க. நிர்வாகிகள் நம்மிடம் கூறியதாவது:
தேர்தல் அறிவிப்புக்கு முன் கோவை முழுவதும் அண்டாக்கள் வழங்கப்பட்டன. தி.மு.க. நிர்வாகிகள் சிலர் அண்டாக்களை சுட்டு விட்டனர். அதனால் ஒவ்வொரு பூத்திலும் கரூர் ஆட்களின் மேற்பார்வையில் பட்டுவாடா நடந்தது.
கோவையில் உள்ள 3,563 பூத்களுக்கும் கரூரில் இருந்து ஆட்கள் வந்தனர். அந்தந்த பூத் எண், வாக்காளர்கள் விபரம், தொகை குறிப்பிட்டு பட்டுவாடாவுக்கான பையும் வந்துவிட்டது.
சராசரியாக 80 சதவீத வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய திட்டமிட்டனர். ஆனால் அ.தி.மு.க.வினர் கரூர்காரர்களை கையும், களவுமாக பிடித்து பிரச்னை செய்தனர்.
அதை பயன்படுத்தி உள்ளூர் நிர்வாகிகள் பணத்தை கையாடல் செய்துவிட்டனர். கோவை தெற்கில் ஓட்டுக்கு ரூ.5,000 கொடுக்க முடிவு செய்த நிலையில், சில பகுதிகளில் ரூ.2,000 முதல் ரூ.2,500 தான் சென்றுள்ளது.
பகுதி செயலர்கள் சிலர் ரூ.1 கோடி வரை சுருட்டியுள்ளனர். இதனால் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் கொடுக்கும் திட்டத்தை ரத்து செய்துவிட்டோம். பட்டுவாடா குறித்த புகார் அங்கே சுற்றி, இங்கே சுற்றி கடைசியில் செந்தில் பாலாஜியிடமே சென்றுவிட்டது.
ஓட்டுப்பதிவின்போது செந்தில் பாலாஜி ராமநாதபுரம் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஆய்வுக்காக சென்றார்.
அங்கு அவரிடம் சில பெண்கள், 'எங்களுக்கு பணமே வரலை. கட்சிக்காரங்களே வச்சிக்கிட்டாங்க' என்று புகார் கூறினர்.
கோபப்பட்ட அவர், உடனே சம்பந்தப்பட்ட நிர்வாகிகளை அழைத்து கடுமையாக எச்சரித்து பணத்தை கொடுக்க வைத்தார்.
தேர்தல் முடிவுக்கு பிறகு கோவை தி.மு.க.வில் அதிரடி நடவடிக்கைகள் இருக்கும். அதில் இந்த பட்டுவாடா மேட்டர் முக்கிய இடம் பிடிக்கும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.