செமஸ்டர் தேர்வு செலவின தொகை முடக்கம்: பேராசிரியர்கள் அதிருப்தி

சென்னை:அரசு கல்லுாரி செமஸ்டர் தேர்வுக்கான செலவின தொகையை, சென்னை பல்கலை இரண்டு ஆண்டுகளாக முடக்கியுள்ளதாக, பேராசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

சென்னை பல்கலையின் கீழ், 121 கலை, அறிவியல் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், 100 கல்லுாரிகள் தன்னாட்சி பெறாதவை.

இவற்றில், திருத்தணி, பெரும்பாக்கம், ஆர்.கே.நகர், திருவொற்றியூர், குன்றத்துார், நெமிலி, உத்திரமேரூர்..... ஆகிய எட்டு அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளும் அடங்கும்.

இக்கல்லுாரிகளுக்கான செமஸ்டர் தேர்வு செலவினங்களுக்கான தொகையை, இரண்டு ஆண்டுகளாக, சென்னை பல்கலை விடுவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழக பொதுச் செயலர் சுரேஷ் கூறியதாவது:

ஒவ்வொரு செமஸ்டர் தேர்வின்போதும், மாணவ - மாணவியரிடம் இருந்து, தேர்வுக்கான கட்டணம் வசூலிக்கப்பட்டு, சென்னை பல்கலையிடம் சமர்பிக்கப்படுகிறது. செமஸ்டர் தேர்வு நாட்களில், அதற்கான ஏற்பாடுகள், தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் செலவினத்திற்கான தொகையை, இரண்டு ஆண்டுகளாக பல்கலை விடுவிக்காமல் உள்ளது.

கடந்த 2024 ஏப்ரல் முதல் 2025 நவம்பர் வரையிலான செமஸ்டர் தேர்வுகளுக்கான, 50 லட்சம் ரூபாய் செலவினம் இன்னும் வழங்கப்படவில்லை. இந்த இரண்டு ஆண்டுகளும், பேராசிரியர்கள் தங்களின் சொந்த பணத்தையே செலவு செய்துள்ளனர்.

எனவே, சென்னை பல்கலை, இரண்டு ஆண்டுகால செமஸ்டர் தேர்வு செலவினத் தொகையை விடுவிக்க, உயர்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

**

Advertisement