திருவொற்றியூரில் கம்பர் பூங்கா பாரதி பாசறை பொது குழுவில் தீர்மானம்

திருவொற்றியூர்: 'திருவொற்றியூரில் கம்பர் பூங்கா அமைக்க வேண்டும்' என, பாரதி பாசறை பொது குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவொற்றியூர் பாரதி பாசறையின், 42வது பொதுக்குழு, தொழிற்சங்க வாதி என்.துரைராஜ் தலைமையில், நேற்று முன்தினம் கூடியது. இதில், கவுரவ தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

திருவொற்றியூரில், 12ம் நுாற்றாண்டில், கம்பர் வந்து சதுரான மடத்தில் தங்கி, வால்மீகி ராமாயணத்தை பகலில் கேட்டு, இரவில் தமிழில் கம்பராமாயணமாக பாடினார். இதற்கு சான்றாக வட்டப் பாறை காளி தீப்பந்தம் பிடித்தாள் என்ற வரலாற்று செய்தியை, அடுத்த தலைமுறைக்கு கடத்த, திருவொற்றியூர் கம்பர் பூங்கா அமைத்து, கல்வெட்டில் பதிக்க வேண்டும்.

திருவொற்றியூர் நெடுஞ்சாலையை, வள்ளலார் நெடுஞ்சாலை என மாற்றியதற்கு, தமிழக அரசுக்கு பாராட்டு. தன் 12 வயது முதல் 35 வயது வரை, ராமலிங்க அடிகளார், திருவொற்றியூரின், நந்தி ஓடையில் தங்கி, 1,014 திருவருட்பா திருவொற்றியூரை பற்றி பாடியுள்ளார். இங்கு வள்ளலார் நந்தி ஓடை மண்டபம் அமைக்க தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.

திருவள்ளுவர் திருக்கோவில் அமைத்ததற்கு நன்றி. அவரது சீடர் ஏலேல சிங்கருக்கு கோவில் வளாகத்தில், தனிச் சிலை அமைக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும், திருவள்ளுவர் கோவிலை, சிவன் கோவிலாக மாற்றி விடக்கூடாது.

விம்கோ நகர் - மாதவரம் மெட்ரோ ரயில் நிலையத்தை இணைக்க வேண்டும். விம்கோ நகர் ரயில் நிலையம் முக்கிய முனையமாக மாறி வருவதால், இதனை உடனடியாக செய்யவேண்டும்.

திருவொற்றியூர், மாநகரின் முக்கிய சுற்றுத்தலமாக விளங்கி வருகிறது. ஆனால், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் போதுமானதாக இல்லை. அதை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சியில், பாசறை நிறுவனர் மா.கி.ரமணன், தலைவர் குமார், செயலர் மோகன் குமார், பொருளாளர் நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement