சொத்து வரி செலுத்தியதற்கான ரசீது வராததால்  மக்கள் குழப்பம்

ஆவடி: ஆவடி மாநகராட்சியில், சொத்து வரி செலுத்தியதற்கான ரசீது வராததால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.

ஆவடி மாநகராட்சியில் 92,300 பேர் சொத்து வரி செலுத்தி வருகின்றனர். இதன் வாயிலாக, மாநகராட்சிக்கு ஆண்டுதோறும் 81.60 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இந்நிலையில், 2026 - 27ம் நிதியாண்டிற்கான சொத்து வரியை வசூலிக்க, மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது.

மேலும், ஏப்., 30ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்துவோருக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என, ஆவடி மாநகராட்சி அறிவித்துள்ளது.

இந்நிலையில், சில வாரங்களாக, 'டிஎன் அர்பன் இபே' எனும் ஆன்லைன் செயலி வாயிலாக சொத்து வரி செலுத்தும் போது, கட்டணம் செலுத்தியதற்கான ரசீது மற்றும் பணம் செலுத்தியதற்கான உறுதிமொழி குறுஞ்செய்தி வரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.

இது குறித்து அதிகாரிகளிடம் முறையான பதில் அளிக்காததால், முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, 'சில நேரங்களில் 'சர்வர்' கோளாறால் இது போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. மக்கள் அச்சப்பட தேவையில்லை; ஒருவேளை தவறுதலாக மீண்டும் கட்டணம் செலுத்தி இருந்தாலும், அந்த பணம் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்' என்றார்.

இது குறித்து பருத்திப்பட்டு கேந்திரிய விஹார் குடியிருப்பைச் சேர்ந்த சாய்நாத் கூறியதாவது:

நான் கடந்த 17ம் தேதி, 'ஆன்லைன்' செயலியில் சொத்து வரி செலுத்தினேன். இதுவரை அதற்கான ரசீது வரவில்லை.

இதனால் ஆவடி மாநகராட்சிக்கு பணம் சென்றதா, இல்லையா என தெரியவில்லை. பணம் கட்டியதும் 'கன்பர்மேஷன் மெசேஜ்' ஏதும் வராததால் குழப்பமாக உள்ளது.

எங்கள் குடியிருப்பில் பலர் ரசீது வராததால், இரண்டாவது முறையாக வரி செலுத்தியுள்ளனர். இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement